அவங்களை நம்பாதீங்க – விஜய்க்கு விஜய்பிரபாகரன் அறிவுரை

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் தேசிய நெடுஞ்சாலையில் தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நேற்று மாலை நடைபெற்றது. நேற்று மதியம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 90 அடி கொடிக்கம்பத்தில் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும். நாட்டு மக்களுடைய வாழ்வை கருத்தில் கொண்டு கூட்டணி பற்றி முடிவெடுக்கும் முழு அதிகாரமும், இந்த மாநாடு வாயிலாக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அளிக்கப்படுகிறது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் பேசிய பிரேமலதா, தேமுதிக சாதாரண கட்சி இல்லை. நமக்கென்று ஒரு மரியாதை, கண்ணியம் உண்டு. அதையெல்லாம் யார் மதிக்கிறார்களோ? என் தொண்டர்களை யார் மதிக்கிறார்களோ? அவர்களுடன்தான் கூட்டணி. நமக்குரிய இடங்கள், தொகுதிகளை உரிய முறையில் பெற்று கடைக்கோடி தொண்டன் தலைநிமிர்ந்து நிற்கும் அளவில் கூட்டணி அமைப்போம். நமது முரசு எட்டுதிக்கும் வெற்றி முரசு என்றார்.

தேமுதிக இளைஞரணி தலைவர் விஜய பிரபாகரன் பேசுகையில்…

தேமுதிகவுக்கு என்ன கொள்கை இருக்கு? என்று எல்லோரும் கேட்கிறார்கள். இலஞ்சம், ஊழலை ஒழிக்கும் ஒரே கொள்கை கொண்ட இயக்கம் தேமுதிகதான். நமது கொள்கை, கோட்பாடுகள் கேப்டன். இதில் எல்லாக் கொள்கையும் அடங்கியுள்ளது. கேப்டன் என்ற ஒரு சொல்லுக்காகத்தான் இன்று இத்தனை பேர் இருக்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு தேமுதிக என்னவென்று புரியணும். கூட்டணி முடிவுக்காக நான் காத்திருக்கிறேன். கூட்டணி எதுவாக இருந்தாலும் நாம் ஒன்றாகச் செயல்படணும்.
ஜனநாயகன் படப்பிரச்சினையை வைத்து காங்கிரசுக் கட்சியினர் உங்களுக்கு அட்வைஸ் செய்யுறாங்க. அவர்களை நம்பாதீங்க. எம்பி தேர்தலில் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள். அவர்களை மட்டும் நம்பாதே ப்ரோ. இதை வைத்துக் கூட்டணி பேசக் கூட வாய்ப்பு இருக்கிறது. நம்பிடாதீங்க ப்ரோ

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response