
நேற்று முன்தினம் இரவு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார் எடப்பாடி பழனிச்சாமி. இதையடுத்து நேற்று காலை அவர் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது,அதிமுக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைவாரா? என்ற செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, எங்கள் கூட்டணி இன்னும் வலுவாகும். அது நடைபெறும் பொழுது உங்கள் அனைவரையும் அழைத்துச் சொல்வேன் என்று எடப்பாடி பழனிச்சாமி மழுப்பலாக பதிலளித்தார்.
அதனால் அந்தக் கூட்டணியில் டிடிவி.தினகரன் இணையவிருக்கிறார் என்பது உறுதியானது. அது உடனடியாக நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அதேநேரத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் டெல்லி சென்றுள்ளார். நேற்று காலை ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ்கோயலை சந்தித்துப் பேசியுள்ளார். அதன்பின் நேற்றிரவு 9 மணி அளவில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.அப்போது, அதிமுக-பாஜக கூட்டணியில் டிடிவி.தினகரனின் அமமுக சேருவது உறுதியாகியிருக்கிறது என்கிறார்கள்.
அந்தக் கட்சிக்கு 7 தொகுதிகள் கொடுக்க முடிவாகியுள்ளதாகவும் தெரிகிறது. பாஜகவுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் இருந்து அமமுகவுக்கு ஒதுக்கப்படுகிறது என்றும், அதேபோல ஓ.பன்னீர்செல்வத்துக்கும் விரைவில் தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன என்றும் டெல்லி பாஜக வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.


