தமிழக முதல்வருக்கு எழுத்தாளர் இந்துமதி முக்கிய கோரிக்கை

எழுத்தாளர் இந்துமதி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு வெளிப்படையான வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கிறார்.

அதன்விவரம்…

தமிழக முதல்வர் அவர்களுக்கு,

தாங்கள் தரப்போகும் மாதம் 2500 ரூபாய் பற்றிய என் கருத்தை வெளிப்படுத்துகிறேன்.
60 வயதிற்கு உட்பட்டவர்களுக்குத்தான் இந்தப்பணம் வழங்கப்படும் என்று எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

இன்றைய காலகட்டத்தில் வயதானவர்கள் முற்றிலும் ஒதுக்கப்படுகின்றனர்.பூமர் என்றும்,old furniture என்றும் விமரிசிக்கப்படுகின்றனர்.பெண்களைப் பெற்றவர்கள் நிலமையாவது கொஞ்சம் தேவலாம்.ஆனால் மகன் மருமகள் தயவில் வாழ்பவர்களின் நிலை வெளியில் சொல்ல இயலாத சோகம்.

அவர்களின் அடிப்படைத் தேவை வயதானதன் காரணமாக வரக்கூடிய சில சுகவீனங்களும் அதற்கான மருந்து மாத்திரைகளும்..
அறுவை சிகிச்சை என்று வந்துவிட்டால் மருத்துவமனைகள் கேட்கப்படும் பல்லாயிரக்கணக்கான பணம்.சில சமயம் இலட்சங்களையும் தொடுகின்றது.தாங்கள் சம்பாதித்த காலங்களில் மகன் மகள்களின் எதிர்காலத்திற்காகவும் முக்கியமாக அவர்களின் படிப்பிற்காகவும்,திருமணத்திற்காகவும் செலவு செய்து கையில் பணமில்லாமல் நிற்பவர்களின் நிலமையை நீங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.

மாநில அரசின் ஒரு இலட்ச ரூபாய்க்கான காப்பீட்டு அட்டையோ,முக்கியமாக மத்திய அரசின் 5 இலட்ச ரூபாய் காப்பீட்டு அட்டையையோ எந்த மருத்துவமனையும் ஏற்றுக்கொள்வதில்லை.இதைப்பற்றி நான் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் முறையிட்டேன்.ஆவன செய்வதாகக் கூறினார்.ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.இந்த மத்திய மாநில அரசின் காப்பீட்டுத் திட்டங்களை அனைத்து மருத்துவமனைகளும் ஏற்றுக்கொண்டால் போதும். முதியவர்கள் மட்டுமின்றி நடுத்தர,கடைமட்ட குடும்பங்களின் மருத்துவமனை பற்றிய பயமும் கவலையும் விலகும்.

தாங்கள் பதவி ஏற்றுக் கொண்டதிலிருந்து முதல்வன் புகழேந்தியாகவே ஆக்கப்பூர்வமாகப் பணிபுரிகிறீர்கள். அதற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

நமது அண்டை மாநிலமான பெங்களூரு மருத்துவமனைகள்,மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டமான 5 இலட்சத்தை ஏற்றுக்கொண்டு அந்த மக்களுக்கு உதவி செய்கிறபோது நம் தமிழ்நாட்டில் இயலாதா என்ன?

60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களை மனதில் கொண்டு அவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரவர்களின் மருத்துவச் செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.மத்திப மாநில காப்பீட்டு அட்டைகளை உடனடியாக அனைத்து மருத்துவமனைகளும் அங்கீகரிக்க உத்தரவு போடவேண்டும்.

இளைஞர்களையும்,மத்திய வயதுக்காரர்களையும் விட அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் உங்களின் உதவித்தொகையும் மருத்துவ உதவியும் தேவை என்பதைத் தாங்கள் உணர வேண்டும் முதல்வரே…

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response