
அஇபுதமமுக தலைவர் சசிகலா இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்….
தமிழர்கள் வரலாற்றில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளில்,இலங்கைத் தமிழர் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரத்தமிழர்களுக்கும்,கொடூரமாகக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கும் எனது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
தமிழ்இனப்படுகொலையில் உயிரிழந்த எம் உறவுகளின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி,காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதிக்கான குரலாகவும்,தமிழர் இனத்தின் உரிமை மற்றும் மரியாதைக்கான உறுதியான நினைவாகவும் இன்று நாம் தலைவணங்குகிறோம்.
இலங்கைத்தமிழர்களின் நலனுக்காக புரட்சித்தலைவர் அவர்கள் தனது இறுதி மூச்சுவரை உறுதுணையாக நின்று இருக்கிறார்.அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பிற்காகவும், நல்வாழ்வுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து இருக்கிறார்.இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காகவும்,அவர்களின் உரிமைகளுக்காகவும் எண்ணற்ற பணிகளை செய்து வருகிறோம்.
மேலும்,மே 18 தினத்தினை நாம் தமிழ்குடிகளின் எழுச்சி நாளாக கருதவேண்டும்.அதனை கருத்தில் கொண்டு பல்வேறுசாதியாகவும்,குடிகளாகவும் பிரிந்து கிடக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழின் வளர்ச்சிக்காகவும்,தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்.
தமிழினப் படுகொலை நாளாக ஒவ்வொரு ஆண்டும் நினைவில் கொள்கின்ற வகையில் தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் அமைந்து இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும்,பல்வேறு தலைவர்கள் நேரில் வந்து,அங்கு நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு இதேநாளில்,இலங்கை போரில் உயிர் தியாகம் செய்த நம் உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வீரவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செய்ததை என்றென்றும் என் நினைவில் கொள்வேன் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த ஒவ்வொரு தமிழரின் தியாகமும் என்றும் வரலாற்றில் அழியாததாகும். அவர்களின் வேதனை,துயரம்,போராட்டம் அனைத்தும் தமிழர் இனத்தின் மனசாட்சியாக என்றும் நிலைத்து நிற்கும்.இந்த நினைவுநாளில் உயிரிழந்த அனைத்து தமிழர்களுக்கும் என் ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


