
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கும்போது அதனை டிவிகே என அவரது தொண்டர்கள் சுருக்கமாக அழைத்தனர். இதற்கு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சுருக்கமும் டிவிகே என்பதால் எங்களது கட்சிப்பெயரை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில்,பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடிகர் விஜய் போட்டியிடுவதால் அவரது தொண்டர்கள் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தினமும் வாக்கு சேகரிக்கும்போது டிவிகே கட்சிக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் பெரம்பூரில் டிவிகே கட்சிக்கு வாக்களியுங்கள் என வாக்குக் கேட்டு வருகின்றனர். இதனால் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் வழக்கறிஞர்கள் பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் டிவிகே என்பதை பயன்படுத்தக்கூடாது. நாங்கள்தான் உண்மையான டிவிகே என புகார் மனு அளித்திருந்தனர்.
அதன் அடிப்படையில்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இதற்கு விளக்கம் அளிக்கவேண்டும் என பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.இதையடுத்து,நேற்று வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் உள்ள பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெரம்பூர் வேட்பாளர் வேணுகோபால் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில்…
2013 ஆம் ஆண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கப்பட்டது.தேர்தல் ஆணையத்திலும் கட்சி பதியப்பட்டு தேர்தல்களைச் சந்தித்து வருகிறது. 2024 இல் தான் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது.உண்மையான டிவிகே நாங்கள்தான்.தமிழக வெற்றிக் கழகம் டிவிகே என்பதைப் பயன்படுத்தக்கூடாது என 2024 இல் புகார் அளித்துள்ளோம்.எனவே,தமிழக வெற்றிக் கழகம் டிவிகே என பயன்படுத்துவதைத் தடுக்கவேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்.
ஏற்கனவே,இதுகுறித்த வழக்குகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளதால், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் யார் டிவிகே என்ற பெயரைப் பயன்படுத்துவது என்பதில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் தீர்வு காணப்படுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.


