ஒன்றிய பாஜக அரசின் கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் உதயநிதி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன், கூட்டணி கட்சித் தலைவர்களான திக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரசுக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சிச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், தவாக தலைவர் வேல்முருகன்,மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, கொமதேக தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒன்றிய அரசையும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சரையும் கண்டித்து கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,,,,
இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே கொந்தளிப்பில் உள்ளது, ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. டிசம்பரில் சென்னை மற்றும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு ஒரு பைசா நிதி கூட வழங்கவில்லை.கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் உள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் கட்டிய வரிப்பணத்தை பெற்றுக் கொண்டு நிதி வழங்க மறுக்கிறது. தமிழ்நாடு மக்களை ஒருபோதும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்திய அரசியல் சட்டத்தை மதிக்கிறோம், ஜனநாயகத்தை மதிக்கிறோம். ஆனால் ஒன்றிய பாசிச பாஜக அரசைதான் எதிர்க்கிறோம். இன்னொரு மொழிப் போராட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நம்முடைய பிள்ளைகளைக் காக்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இதை அதிமுகவினர் அரசியல் ஆக்க வேண்டாம்.எங்களுடன் ஒன்றிணைந்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வாருங்கள். மும்மொழிக் கொள்கையை எதிர்ப்போம். 1938 இல் இந்தி எதிர்ப்புக்காக பலி கொடுத்தோம், மீண்டும் 2025 ஆம் ஆண்டு மொழிக்காகப் போராட்டம் நடத்தத் தயாராக உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதா? வேண்டாமா? என்பது பாஜக கையில்தான் உள்ளது.
இன்று தமிழர்கள் பல்வேறு துறைகளில் வேலை பார்த்து வருகின்றனர். இஸ்ரோவுடைய தலைவரே தமிழர் தான். அவர்களில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையில் கற்றவர்கள்தான்.
இந்தித் திணிப்பை எதிர்த்து எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் இறந்திருக்கிறார்கள்.இதையெல்லாம் மறந்துவிட்டு உங்களுடைய மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிவோம் என்று நினைத்தால் அது கனவில் கூட நடக்காது. தமிழைக் காக்க எங்கள் உயிரையும் விட தயாராக இருக்கிறோம் என்பதை நாங்கள் தெரியப்படுத்திக் கொள்கிறோம். எங்களின் பிள்ளைகளின் கல்வியோடு விளையாடாதீர்கள். போன முறை ‘கோ பேக் மோடி’ என்று சொல்லி துரத்திய தமிழர்கள், நிதி வழங்கவில்லை என்றால் ‘கெட் அவுட்’ மோடி என்று சொல்லித்தான் துரத்துவார்கள்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது….
இது உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? 40 இலட்சம் மாணவர்களின் வாழ்வில் விளையாடாதீர்கள். ஒன்றிய அமைச்சருக்கு ஒத்திசைப்பட்டியல் என்றால் என்ன என்றே தெரியவில்லை. அனைத்தையும் மூடி மறைக்கும் இரகசியப் பட்டியலாக அதை வைத்துள்ளதால்தான் அனைத்து மாநிலங்களையும் ஏமாற்றுகிறார்கள். அதேபோல தமிழகத்தை ஏமாற்றப் பார்க்கிறார்கள். மற்ற மாநிலங்களை நீங்கள் ஏமாற்றலாம். ஆனால் இங்குள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஏமாற்ற இன்னும் ஒருவர் பிறந்துதான் வரவேண்டும் என்றார்.
விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது….
ஒன்றிய அரசு இன்னும் பிடிவாதத்தோடு நிதியைத் தர முடியாது என்று ஆணவத்தோடு சொல்லுகிற நிலையைப் பார்க்கிறோம். இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் ஆணைப்படி இந்த அடையாள ஆர்ப்பாட்டம் தொடங்கி இருக்கிறது. மீண்டும் ஒரு மொழிப்போர் அறப்போராட்டம் தொடங்க உள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மொழியை பேசுகிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும், ஒரே தேசம், ஒரே கட்சி இது தான் அவர்களின் இறுதி இலக்கு.அது ஒருபோதும் நடக்காது என்றார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது….
தர்மேந்திர பிரதானுக்கு தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகம், போராட்டம் தெரியாது. மொழிக்காக தீக்குளித்து மாண்டவர்கள் உலகிலேயே தமிழகர்கள் தான். நிதியைக் கொடுக்க முடியாது எனக்கூற நீ யார்? தமிழ்நாட்டை அச்சுறுத்த நினைத்தால் உங்கள் காலத்திலேயே இந்தியா துண்டுதுண்டாகச் சிதறுகிற நிலை ஏற்படும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது….
1965 ஆம் ஆண்டு என்ன நடைபெற்றது என்று மோடிக்கும் தெரியாது, அந்தக் கட்சிக்கும் தெரியாது. இரு மொழிக் கொள்கை காலாவதியாகவில்லை, நீங்கள் தான் காலாவதி ஆகி விட்டீர்கள், ஒன்றிய கல்வி அமைச்சர் இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது….
கல்வியில் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் மற்றொரு மொழியைத் திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க ஒன்றிய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இந்த நிலையை நிறுத்தாவிட்டால் அடுத்த கட்டப் போராட்டத்திற்குச் செல்வோம். தமிழகமே ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக திரண்டு வரும் என்றார்.
தமிழக காங்கிரசுக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது….
இந்தப் போராட்டம், அடுத்த தலைமுறையைப் பாதுகாக்கின்ற போராட்டம். இன்று இந்தியாவில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாவது மாநிலமாக இருக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலத்துக்கு பிறகு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் கோடி வரியை ஒன்றிய அரசிற்குத் தருகிறோம், எங்களுக்கு உரிய உரிமையை ஏன் தர மறுக்கிறீர்கள் என்று கேட்டால் இதுதான் ஜனநாயகம் என்று பாஜக சொல்லுகிறது. இது தமிழ்நாடு. பின்புற வழியாக இந்தியைத் திணிக்க நினைத்தால் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பாஜக ஒருபோதும் தமிழ்நாட்டில் கால் ஊன்றாது என்றார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாவது….
முதல்வருக்கு அன்பான வேண்டுகோள் தமிழ்நாட்டில் இயங்குகின்ற ஒன்றிய அரசு அலுவலகத்தில் நாங்கள் ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று கூறுங்கள், சுங்கக் கட்டணங்கள் தர மறுப்போம், ஜிஎஸ்டி கொடுக்க ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று அனைவரும் கூறுங்கள். இவற்றை முதல்வர் செய்தால் மோடி உங்கள் வழிக்கு வருவார். தமிழ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி அரசை நாடாளுமன்றத்தில் கிழித்துத் தொங்கவிடுகிறார்கள், நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.இந்த இலட்சணத்தில் இந்தியைத் திணிக்க வந்துவிட்டார்கள்
இவ்வாறு அவர் பேசினார்.