அமேசான் இணையதளத்தில் வெளிவந்த தி ஃபேமிலி மேன் 2 தொடரின் முன்னோட்டம் மே 19ஆம் தேதி வெளியானது.
அதில், சமந்தா இலங்கையிலிருந்து வந்த தீவிரவாத தமிழ்பெப்ண்ணாக்க் காட்டப்பட்டுள்ளார். மனோஜ் பாஜ்பாயி, சமந்தாவைப் பிடிக்கும் என்ஐஏ அதிகாரியாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரைபடமும் சீருடையில் போராளிக் குழுக்கள் பயிற்சி பெறும் காட்சிகளும் இதில் இடம்பெற்றிருந்தன.
எனவே இந்தத் தொடரில் தமிழர்களைத் தீவிரவாதிகளாக காட்ட முயற்சிப்பதாகவும் இதைத்தடைசெய்ய வேண்டும் என்றும் அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராகவும், சமந்தாவுக்கு எதிராகவும் சமூக தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் அதற்குக கண்டனம் தெரிவித்ததோடு, அதைத்தடை செய்ய வேண்டும் என்றும் கோரினார்கள்.
அதன் அடுத்த கட்டமாக தமிழக தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ்,மே 24 அன்று மத்திய தகவல் விளம்பரத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு இதுகுறித்து கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில், “தி ஃபேமிலி மேன் எனப்படும் ஹிந்தி இணைய தளத்தொடரின் முன்னோட்டக் காட்சிகள் மிகவும் கண்டனத்துக்குரியது. இதில் இடம்பெற்ற காட்சிகள், ஈழ விடுதலை பற்றி இழிவாகவும், கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது கண்டனத்துக்குரியது. மேலும் இந்தத் தொடர் எந்த வகையிலும் கற்பனையிலும் கூட தமிழ் கலாசாரத்துக்கு மதிப்பு கொண்டிருப்பதாகக் கருத முடியாது.
இந்தத் தொடரில் தமிழ் பேசும் நடிகை சமந்தாவை பயங்கரவாதியாக முத்திரை குத்துவது உலகம் முழுதும் வாழும் தமிழர்களின் பெருமைக்கு எதிரானதாகும். இந்தத் தொடர் ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழர்களையும் மிகவும் புண்படுத்தியுள்ளது. எனவே இந்தச்சூழலில் ஃபேமிலி மேன் 2 தொடரை தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஒளிபரப்பத் தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தார்.
முன்னோட்டத்துக்கே இப்படி ஒரு கடிதம் எழுதிய அமைச்சர், இப்போது முழுத் தொடரும் வெளியாகி அதில், தமிழீழ விடுதலைப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும் தமிழ் மக்களை இழிவுபடுத்துகிற மாதிரி காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
இதனால், தமிழ் உணர்வாளர்களும் திரைப்பட இயக்குநர்களும் அத்தொடருக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் வைத்து வருவதோடு அத்தொடரைத் தடை செய்ய வேண்டுமென்றும் தொடரை எடுத்தவர்கள் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டுமெனவும் கோரி வருகின்றனர்.
இவ்வளவு எதிர்ப்புகள் நிலவிக் கொண்டிருக்கும் நேரத்தில் முன்னோட்டம் பார்த்தே தொடரைத் தடை செய்யவேண்டுமென மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதிய அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் வைகோ ஆகியோர் மயான அமைதி காப்பது ஏன்? என்கிற் கேள்வி எழுப்புகிறார்கள்.
பதில் சொல்வார்களா?