விவசாயப் பேரணியில் பங்கேற்றவர் மீது கொலைமுயற்சி வழக்கு – தமிழக அரசுக்கு பெ.மணியரசன் கண்டனம்

குடியரசு நாள் உழவர் பேரணியில் சிறைபிடித்தோரை விடுதலை செய்ய வேண்டும்! வழக்குகளைக் கைவிட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

உழவர் ஒழிப்புச் சட்டங்கள் மூன்றையும் முற்றாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, 26.01.2021 குடியரசு நாள் அன்று தமிழ்நாட்டில் உழுவை எந்திர (டிராக்டர்) ஊர்வலம் நடத்த அனைத்திந்திய உழவர்கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முன்வந்தது. அந்தப் பேரணிகளுக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்தது சனநாயக மறுப்பாகும்!

உழவர்களின் வாழ்வை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் சட்டங்கள் இம்மூன்றும்! நெல், கோதுமை, கரும்பு போன்றவற்றுக்கு அரசு ஆதரவு விலையும் இருக்காது; அரசு கொள்முதலும் இருக்காது. அதன்பின் நியாய விலைக் கடையும் இருக்காது. மனித உயிர் வாழ்வுக்குத் தேவையான இன்றியமையாப் பண்டங்கள் என இந்திய அரசால் பட்டியல் இடப்பட்டு, பாதுகாக்கப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உருளைக் கிழங்கு, வெங்காயம் போன்றவற்றை அப்பட்டியலில் இருந்து நீக்கி, பெருங்குழுமங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அவற்றைப் பதுக்கிக் கொள்ளலாம், செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்று மோடி அரசு திறந்துவிட்டுள்ளது,

எனவே, இம்மூன்று சட்டங்களையும் அனைத்து மக்களும் எதிர்த்துப் போராட வேண்டும். இந்தச் சட்டங்களைத் தமிழ்நாடு அரசு ஆதரிப்பது மிகமிகப் பாதகமான செயல். அதேவேளை இச்சட்டங்களை எதிர்த்து அடையாள ஊர்திப் பேரணி நடத்திட அனைவருக்கும் உரிமை வழங்குகிறது அரசமைப்புச் சட்டம்!

குடியரசு நாளான 26.01.2021 அன்று அனைத்திந்தியப் போராட்டக் குழுவினரின் பேரணிகளைக் காவல்துறையினரை வைத்து அயல்நாட்டு இராணுவத்தை எதிர்ப்பது போல் தமிழ்நாடு அரசு முரட்டுத்தனமாக எதிர்த்தது கண்டனத்திற்குரிய செயல்! அத்துடன் அப்பேரணிகளில் கலந்து கொண்ட சிலரைக் கொலை முயற்சிப் பிரிவு உள்ளிட்ட தண்டனைச் சட்டப் பிரிவுகளில் தளைப்படுத்தி, சிறையில் அடைத்திருப்புது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உழவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்றும, சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response