ஐரோப்பிய நாடுகளில் வேலை தேடுகிறீர்களா? – இதை அவசியம் படியுங்கள்

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருகிறோம், குறிப்பாக நார்வே, சுவீடன், ஜெர்மனி போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு உத்திரவாதம் எனச் சொல்லி ஒரு சில நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நம் மக்களில் சிலரை ஏமாற்றிக் காசு பறிக்கும் திட்டத்துடன் இறங்கியுள்ளதாகப் பல பேரிடம் இருந்து தகவல் வந்தது.

இன்னும் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நிறுவனங்களின் வேலை உறுதிப்பத்திரம் போலவே அச்சிடப்பட்டக் கடிதங்களைக் கூட வழங்கி, மக்களை நம்ப வைத்துக் காசு பார்க்கின்றனர்.

இதில் வேதனை என்னவென்றால், வேலை கிடைத்துவிடும் என ஏதோ ஒரு நம்பிக்கையிலோ, நல்வாழ்வு குறித்த எதிர்ப்பார்ப்பிலும், ஐரோப்பிய நாடுகளுக்கு உள்ளே வந்துவிட்டால் போதும், அங்கே வேலையே இல்லையெனினும் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என நம்மவர்களும் தவறான நபர்களிடம் ஆசைக்கு இரையாகிவிடுகின்றனர்.

நிறுவனங்களின் கடிதம், சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்க்க நம்மிடம் ஆலோசனைக்கு வருபவர்கள் கூட, நாம் உண்மையைச் சொன்னாலும், ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் இல்லாது, ஒருவேளை வேலை கிடைத்துவிட்டால், சம்பளமே குறைவாகினும், கொஞ்ச நாட்களே இருந்தாலும், முதலில் உள்ளே வந்துவிட்டால் போதும் என சஞ்சலப்பட்டுவிடுகின்றனர் சிலர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, திருநெல்வேலியைச் சார்ந்த ஒரு தம்பி, சுவீடன் நாட்டில் வேலை கிடைத்திருப்பதாகச் சொல்லி வேலை உறுதிக் கடிதம் எனக்கு அனுப்பி உண்மைத் தன்மை குறித்துக் கேட்டார்.

வேடிக்கை என்னவென்றால், சுவீடன் நாட்டில் வேலை, ஆனால், வேலை கொடுத்த நிறுவனம் நோர்வே நாட்டைச் சார்ந்ததாக அக்கடித முகவரி இருந்தது. விசாரித்தால் அப்படி ஒரு நிறுவனமே இரண்டு நாடுகளிலும் இல்லை, ஆனால், வேறு ஒரு ஐரோப்பிய நாட்டில் அப்பெயர் தாங்கிய நிறுவனம் ‘உண்மையில்’ செயல்படுகிறது.

இணையத்தில் தேடினாலும் சில உண்மைகளோடு பொருந்திப் போகும் அளவிற்கு தகவல்களை அடுக்கி வைத்து ஏமாற்றுகின்றனர்.

சென்ற வருடம் கோவை, திருச்சி பகுதிகளில் இருந்து சிலர் தொடர்புகொண்டனர். ஒரு வருடம் படிப்பு, ஒரு வருடம் வேலை என உத்திரவாதக் கடிதத்தை கொடுத்து சிலர் பணம் பறித்துள்ளனர்.

இதிலும் சரி, இன்னபிற நிகழ்வுகளிலும் சரி, வேலை வாய்ப்பு, நல்ல சம்பளம், ஐரோப்பிய உள்நுழைவு என பெருங்கனவோடு இருப்பவர்கள், ஏமாற்று நிறுவனங்களிடம் எல்லாவற்றையும் நம்பி இறுதிப் படி வரை ஏறி இறங்கிவிட்டு, கடைசி நேரத்தில், இடம், பொருளாதாரம், பயணம் சார்ந்த தகவல்களை உறுதி செய்ய மட்டுமே எங்களைப் போன்றவர்களை அணுகிறார்கள்.

எவ்வித எதிர்மறைக் கருத்தையும் அவர்கள் காத்துக்கிடக்கும் வேலை குறித்துச் சொன்னாலும், அவர்களைத் தடுக்க நினைக்கிறோம் என நம் மீதே சந்தேகப்பட்டு தொடர்பிற்கு மீண்டும் வருவதில்லை.

சிலர் குற்ற உணர்வில், அதன்பின் ஆலோசனை கேட்பதில்லை.

இந்த வாரம் கூட நோர்வேயில் இருந்து அண்ணன் ஒருவர் என்னிடம், பேர்கன் நகரத்தில் உணவகத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, தஞ்சை, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை பகுதிகளில், மக்களிடம் காசு பறிப்பதாகவும், தொடர்புகொண்ட சிலரிடம் இருந்து கிடைத்த கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் உணவகம் இங்கு இல்லை என்பதோடு, இங்கே அத்தகைய வேலை முறையே இல்லை எனவும் கூறினார்.

முன்பு போல இல்லை. ஐரோப்பாவெங்கும் நம்மவர்கள் நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள்… பலரையும் சமூக வலைத்தளங்கலில் தொடர்புகொள்ள முடியும். எல்லாவற்றையும் தீர விசாரித்துக் கொள்ளவும் முடியும்.இப்படி இருக்கும் காலத்தில், பணம் பறிக்கும் கும்பல்களிடம் ஏமாறாமல், முறையான வழிகளில், சரியான முயற்சிகளில் பணியாற்றினால் நிச்சயம் உலக வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதை நீங்களே அறிந்து, உங்கள் உழைப்பினாலேயே உலகைச் சுற்ற முடியும். ஆகவே, நிதானித்துச் செயல்படுங்கள் உறவுகளே!.

– முனைவர் விஜய் அசோகன்,
அறிவியல் ஆராய்ச்சியாளர், சுவீடன்.

Leave a Response