காவிரி நதியைத் தனியாரிடம் கொடுக்க புதிய சட்டமா? – மோடிக்கு பெ.மணியரசன் கண்டனம்

காவிரியைத் தனியாரிடம் கொடுக்க புதிய சட்டம் இயற்றுவதா? என்று இந்திய அரசுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் – 1956இன் செயல்பாட்டை பெருமளவு சிதைத்துக் குறைக்கும் “ஆற்றுச் சமவெளி ஆணையம்” உருவாக்குவதற்கான சட்ட வரைவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முன் வைக்கப்போவதாக இந்திய அரசு அறிவித்திருக்கிறது.

“மாநிலங்களுக்கிடையிலான ஆறுகள், ஆற்றுச் சமவெளிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், மேலாண்மை செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் நடுவண் அரசின் அதிகாரத்தின்கீழ் இந்த ஆறுகளையும், ஆற்றுச் சமவெளிகளையும் கொண்டு வருவது பொது நலனுக்கு இன்றியமையாதது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது” என இச்சட்டப் பிரிவு 1 ( 3 ) கூறுகிறது.

இச்சட்டத்தின்கீழ் காவிரி ஆறு கொண்டு வரப்படுகிறது. இதுபோன்று, மேலும் 13 ஆறுகள் கொண்டு வரப்படுகின்றன. ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் இந்திய அரசு கையில் குவித்துக் கொள்வது, அதன்பிறகு தண்ணீரையும், நீர் நிலைகளையும் தனியார் நிறுவனங்களுக்கு விற்று விடுவது என்பதுதான் இதன் நோக்கம்!

“தேசிய நீர் சட்டக வரைவு – 2016” என்ற பெயரில் “தேசிய நீர்க் கொள்கை” ஒன்றை இந்திய அரசு அறிவித்தபோதே, ‘இது பேரழிவுத் திட்டம் – தமிழ்நாட்டின் நீர் உரிமைப் பறிக்கும் சட்டம்’ என்று நாம் கண்டனம் வெளியிட்டோம். அந்த தேசிய நீர்க் கொள்கை சட்டத்திலேயே அறிவிக்கப்பட்டவாறு, இப்போது “ஆற்றுச் சமவெளி மேலாண்மை சட்டம் – 2018” கொண்டு வரப்படுகிறது.

ஒருங்கிணைந்த ஆற்றுச் சமவெளி மேலாண்மை என்ற பெயரில் உருவாக்கப்படும் “ஆற்றுச் சமவெளி ஆணையம்” அனைத்து அதிகாரங்களையும் கொண்டது, அதன் முடிவுகள் தொடர்புடைய மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என இச்சட்டத்தின் விதி 20 வரையறுக்கிறது. இந்த ஆற்றுச் சமவெளி ஆணையம் தேசியப் பெருந்திட்டம் ஒன்றை அறிவிக்கும் என்று இச்சட்டத்தின் அத்தியாயம் 4 கூறுகிறது. அதன்படி தண்ணீரும், ஆறு – ஏரி – குளம் – குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளும் தனியார்மயமாகும் என்று கூறுகிறது.

மாநிலங்களுக்கிடையில் ஏற்படும் தண்ணீர்த் தகராறுகளைத் தீர்ப்பதற்கு 1956 சட்டம் இருக்கிறது. இதன்படி, பக்ரா, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற மாநிலங்களுக்கிடையிலான ஆற்றுச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. அரசமைப்புச் சட்ட உறுப்பு 262-இன்கீழ் இச்சட்டம் உருவாக்கப்பட்டது.

ஆனால், இப்போதைய சட்ட வரைவில், மாநிலங்களுக்கிடையில் “தகராறு தீர்க்கும் பொறியமைவு” (Resolution Mechanism) நிறுவப்படவுள்ளதாக அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. மாநிலங்களுக்கிடையில் பேச்சுவார்த்தை, சமரச முயற்சி என்று இழுத்துக் கொண்டிருப்பதற்குக் கூடுதலான ஒரு பொறியமைவை இது ஏற்படுத்தும். அதேநேரம் ஆற்று நீரின் மீதும், ஆற்றுச் சமவெளியின் மீதும் இந்திய அரசின் முற்றதிகாரத்தை நிறுவுவது என்பதுதான் இதன் நோக்கம்! அதன்பிறகு, தண்ணீரை முற்றிலும் தனியார் விற்பனைச் சரக்காக்கி விடுவது என்பதுதான் இச்சட்டம் அறிவிக்கும் “தேசியப் பெருந்திட்டம்” (National Master Plan)!

மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளை, இனி ஆற்றுச் சமவெளி ஆணையத்தின்கீழ் அமைக்கப்படும் நிர்வாக வாரியமே (Executive Board) செயல்படுத்தும் என்று வரைவு ஆணையச் சட்டம் கூறுகிறது. அதன்பிறகு, இப்பொழுதுள்ள காவிரி ஆணையம் – ஒழுங்காற்றுக் குழு ஆகியவை செயலற்றதாகச் செத்துப் போகும்!

இப்பொழுதுள்ள காவிரி ஆணையம் பல குறைபாடுகள் உடையது என்றாலும், அதிகாரிகளைக் கொண்ட நிரந்தரப் பொறியமைவு அது! ஆனால், இப்புதிய சட்டம் நிறைவேறி விட்டால் காவிரிக்கென்று புதிதாக ஓர் ஆணையம் அமைக்கப்படும். அதில் நான்கு மாநில பாசன அமைச்சர்களும், அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருப்பார்கள். அதற்கான தலைவராக நான்கு மாநில முதலமைச்சர்களும் சுழற்சி முறையில் ஒருவருக்குப் பின் இன்னொருவர் என்று வருவார்கள். கர்நாடக முதலமைச்சர் தலைவராகும் போது காவிரியில் தமிழ்நாட்டு உரிமை என்னவாகும்? கர்நாடகத்தின் “இரத்து அதிகாரத்திற்கு” உட்பட்டதாக காவிரி இறுதித் தீர்ப்பு மாற்றப்படும்.

இந்த ஆற்றுச் சமவெளி ஆணையத்திற்கான வரைவு 2013 இல் வந்தபோது, அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா அவர்கள் அப்போதே எதிர்த்து நடுவண் அரசுக்குக் கடிதம் எழுதினார்.

மாநிலங்களுக்கிடையிலான ஆற்று நீர்ச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்கு 1956 சட்டம் போதுமானதாகும். இந்திய அரசின் தமிழினப் பகை காரணமாக, அந்தச் சட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கவில்லை!

இப்போது முன்மொழியப்பட்டுள்ள ஆற்றுச் சமவெளி ஆணையச் சட்டம், நிறைவேறினால் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை முற்றிலும் பறித்து, காவிரி பெரும் பெரும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குப் போகும். இந்தப் புதிய ஆணையம் செயலுக்கு வந்தால், இந்தியாவிலுள்ள எல்லா ஆறுகளையும் இந்திய அரசு தனியாருக்கு வழங்கிவிடும்!

எனவே, ஆற்றுச் சமவெளி ஆணையச் சட்டம் – 2018-ஐ முற்றிலுமாக இந்திய அரசு கைவிட வேண்டும்! தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு – புதுவை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இச்சட்ட வரைவைத் தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழர்கள் – தங்கள் தாயாகிய காவிரியைக் காக்க வீதிக்கு வர வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response