நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்யாண சுந்தரம், அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில்,2020 டிசம்பர் மாதம் சென்னையில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் நேற்று (சனவரி 27,2021) நாம் தமிழர் கட்சியில் இளைஞர் அணிச் செயலாளராக இருந்த வழக்குரைஞர் இராஜீவ் காந்தி, அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர் சமுகவலைதளங்களில் இவர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்தவர்கள் குறித்து சமூகவெளிகளில் விமர்சிக்கவோ கருத்திடவோ வேண்டாம் எனவும் தேர்தலுக்கான ஆக்கப்பூர்வமான பணிகளிலும் செயற்பாடுகளிலும் பரப்புரைகளிலும் கவனம் செலுத்துமாறும் உறவுகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.