அதிமுக கூட்டணியில் பாமக தேமுதிக புதியதமிழகம் ஆகிய கட்சிகளின் நிலை என்ன?

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிகத் தொகுதிகளும், தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளையும் (வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு அல்லது உள்ஒதுக்கீடு-பாமக, தேவேந்திர குல வேளாளர்-புதிய தமிழகம்) உடனே நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும் நிபந்தனை வைத்து வருகிறது.

பாமக வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு அல்லது உள்ஒதுக்கீடு அறிவித்து அரசாணையை வெளியிட வேண்டும்,40 தொகுதிகள் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக, அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. வரும் 31 ஆம் தேதி நடக்கும் பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

இதேபோல், புதிய தமிழகம் கட்சியும் தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணையை வெளியிடக் கோரி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாததால் அவர்களும் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனராம்.

இவ்விரு கட்சிகளும் அரசாணை கோருவது என்பது தொகுதி பேரம் படியாத காரணத்தால்தான் என்கிறார்கள். அவர்கள் கேட்கும் தொகுதிகள் மற்றும் பணம் தர அதிமுக தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது.

தேமுதிக 40 தொகுதிகளைக் கேட்டு வருவதாகவும் அதற்கு அதிமுக மறுப்பு தெரிவிப்பதாகவும் சொல்லப்படுகிறது. தேமுதிகவுக்கு 2.2% மட்டும் வாக்கு வங்கி உள்ளதால் 10 இடங்களுக்கு மேல் தர வேண்டாம் என்பது அதிமுகவின் நிலைப்பாடு என்கிறார்கள். இதனால், அவர்களும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இப்போதைக்கு அதிமுகவும் பாசக்வும் மட்டும் கூட்டணியில் இருக்கின்றன.

Leave a Response