ரஜினியின் யாழ் பயணத்தைத் தடுக்கவேண்டும் -மே17 இயக்கம் அழைப்பு


ரஜினியின் யாழ் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள குறிப்பு……
’லைக்கா’ எனும் பெரு நிறுவனம் தனது தெற்காசிய வணிகத்திற்காக இந்திய-இலங்கை பொருளாதார-பிராந்திய’ உறவுக்கான நிகழ்ச்சியை முன்னின்று நடத்துகிறது. தெற்காசியாவில் பெரிய ரவுடியாக தன்னை முன்னிறுத்தும் இந்தியாவிற்கு இது தேவைப்படும் நிகழ்வு. 2010இல் ஐஃபா எனும் பாலிவுட் திரைப்பட நிகழ்வை தமிழர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதில் பட்ட காயத்தை இரண்டு நாடுகளும் இன்னும் மறந்து விடவில்லை.,

ஐ.நாவில் தனக்கு சாதகமான பிம்பத்தை கட்டிஎழுப்ப இலங்கைக்கு இந்த நிகழ்வுகள் தேவைப்படுகிறது. தனது ‘நல்லிணக்க’ நாடகத்திற்கு லைக்காவின் இந்த நிகழ்வு பெரிதும் உதவும்.

150 வீடுகள் கொடுத்து லட்சக்கணக்கான தமிழர்களின் வாழ்வை சுரண்டிவிட லைக்காவாலும், ரஜினியாலும் இயலும். நல்லவனாக இந்தியாவும் இலங்கையும் வேடம் கட்டவும் இயலும்.

தெற்காசியாவில் இலங்கை, இந்தியாவிற்கான பெரு நிறுவனங்களை உருவாக்கி பொருளாதார பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கு ‘சினிமா’ தேவைப்படும் ஒரு யுக்தி என்று FICCI வர்த்தக கூட்டமைப்பு நிறுவனம் 2010இல் சொன்னது. இந்த அமைப்பின் மீடியா-சினிமா துறையின் அன்றய சிறப்பு தலைவராக இருந்த திரு.கமலஹாசன் இந்த செயல்திட்டத்தினை வெளியிட்டு முகவராக முன்னிறுத்தப்பட்டவர். 2010இல் தமிழகம் ஈழ விடயத்தில் மிக வீரியத்துடன் செயல்பட்ட காலம். எனவே இந்த நிகழ்ச்சி தோற்கடிக்கப்பட்டது. 2017இல் இப்படி தமிழகம் வீரியத்துடன் இல்லாமல் போகலாம் என நினைக்கிறது இந்த அரசுகள்.

அன்று செயல்படாமல் போன விடயம் இன்று ரஜினிகாந்தைக்கொண்டு செயல்படுத்துகிறார்கள்., இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘லைக்கா’ எனும் நிறுவனம் தமிழக திரையுலகில் முதலீடு செய்த பொழுது லைக்காவின் உள்நோக்கமே ‘ஈழ ஆதர்வு கொண்ட தமிழக திரையுலகத்தை’ உடைத்து இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்க வைக்கவேண்டுமென்பது என்று மே17 இயக்கம் தெரிவித்தது. இதனாலேயே இந்த நிறுவனம் தமிழக திரையுலகில் நிராகரிக்கப்பட வேண்டுமென்று பதிவு செய்தோம். இன்று ரஜினி, நாளை கமல்ஹாசன், நாளை மறுநாள் வேறொருவர் என்று இந்த கம்பெனிகளும், அரசும் தனது முகமூடிகளை மாற்றிக்கொண்டிருக்கலாம், நாம் முகமூடிகளுக்கு பின்னால் இருக்கும் சக்திகளை கண்டறிந்து எதிர்கொள்வதே மிகச்சரியான தேவையாக இருக்கிறது.

அன்று லைக்காவின் உள்நோக்கத்தை நாம் ஒன்றாக நின்று வென்றிருந்தால் இன்று இந்த மோசமான நிலை வந்திருக்காது. தமிழர்களை வெறும் சந்தையாக பார்க்கும் இந்த வணிகர்களை நிராகரிக்கும் அரசியல் நமக்கு தேவை.

இந்த நிகழ்வு தோற்கடிக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது.

‘எழுக தமிழ்’; எனும் பேரெழுச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்த யாழ்ப்பாணமும் அதன் இளைஞர்களும் இந்நிகழ்ச்சிக்கு எதிராக களம் காணுவார்கள் என நம்புகிறோம்.

புலம்பெயர் அமைப்புகள் இந்த சீர்கெட்ட நோக்கம் கொண்ட நிகழ்வினை எதிர்த்து நிற்பது ஐ.நா தீர்மானம் வந்த காலத்தில் அவசியமானதாகிறது.

இனப்படுகொலையின் மீது நின்று நடத்தப்படும் வணிகம் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். சல்லிக்கட்டு போராட்டத்தில் திரைத்துறையின் பிம்ப அரசியலை நிராகரித்த தமிழக இளைஞர்கள், அதே தன்மையுடன் இதை எதிர்கொள்ள முன்வரவேண்டும். மலேசியா, ஈழம், புலம்பெயர் என தமிழர்களை சந்தை சங்கிலிகளாக பார்க்கும் இந்த பெருவணிக சினிமா கம்பெனிகள் புறக்கணிக்கப்பட வேண்டும்.

தமிழகம் ஒற்றைக்குரலில் இதற்கான எதிர்ப்பினை பதிவு செய்வது அவசியம். இந்தப் பிரச்சனையின் பின்னனி அரசியலையும், பொருளாதார செயல்திட்டத்தையும் வீழ்த்துவது அவசியம்.

Leave a Response