பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி – வாக்குச்சீட்டு முறை காரணம்

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 105 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 102 அமைப்புகளுக்கு மே 26 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 8 நகராட்சிகள், 75 நகராட்சி மன்றங்கள், 19 நகர பஞ்சாயத்துகள் ஆகியவை அடங்கும். இந்தத் தேர்தலில் மொத்தம் 63.94 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. தேர்தல் தேதிக்கு முன்னதாகவே 80 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 1,977 வார்டுகளுக்கு விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

ஆளும் ஆம் ஆத்மி,காங்கிரசு,பாஜக ஆகிய கட்சிகளுக்கிடையே கடும்போட்டி நிலவியது.

இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே 29) வெளியானது.

நேற்று மாலை நிலவரப்படி, ஆம் ஆத்மி சுமார் அறுநூறு இடங்களில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.அதற்கடுத்து சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 220 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.காங்கிரசு 184 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளது.சிரோமணி அகாலிதளம் 137 இடங்களில் வென்று நான்காமிடம் பிடித்தது. 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஐந்தாமிடத்துக்குப் போயிருக்கிறது பாஜக.

இறுதியாக,பஞ்சாப் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, மொத்தம் உள்ள வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 958 வார்டுகளில் வென்று சாதனை படைத்துள்ளது.இதற்கு அடுத்தபடியாக காங்கிரசு 397 வார்டுகளிலும், சுயேச்சைகள் 251 வார்டுகளிலும், சிரோமணி அகாலி தளம் 192 வார்டுகளிலும் வெற்றியைப் பெற்றுள்ளன.பாஜக 172 வார்டுகளிலும்,பகுஜன் சமாஜ் கட்சி 7 வார்டுகளிலும் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

இதுகுறித்து ஆம் ஆத்மி தலைவர்கள் கூறியதாவது….

ஆளும் பாஜக அமலாக்கத்துறையை வைத்து எங்களை ஒடுக்க நினைத்தது.இப்போது மக்கள்,இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் அக்கட்சிக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்று கூறினர்.அதோடு,இந்தத் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடந்தது.அதனால் பாஜகவால் வாக்குகளைத் திருட முடியவில்லை என்றும் வெளிப்படையாகப் பேசியிருக்கின்றனர்.

இதன்மூலம்,வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்து வாக்குகளைத் திருடித்தான் பாஜக வெற்றிகளைச் சுவைத்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியிருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response