
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 47 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது.அதனால் பிரதான எதிர்க்கட்சியாக முடியவில்லை.ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே விவாதப் பொருளாகியுள்ளது.
இதனால்,அதிமுகவுக்குள் பெரும் புயலை கிளப்பத் தொடங்கியுள்ளது.எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக,கடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக 11 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இது கட்சி நிர்வாகிகளிடமும், அடிமட்டத் தொண்டர்களிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நேற்று முன்தினம் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் தொடர் தோல்வி குறித்தும், கூட்டணி குறித்த முடிவு குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினர்.அப்போது எடப்பாடி பழனிச்சாமி மீது நேரடியாக சிலர் குற்றம் சுமத்தினர். பின்னர் இந்தக் கூட்டம் நிறைவடைந்தது. எனவே அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அதன்பின், திடீர் திருப்பமாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஒன்று கூடினர்.அங்கும் ஆலோசனை நடந்தது.அதில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், லீமா ரோஸ், தளவாய் சுந்தரம் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில், எடப்பாடி பழனிச்சாமியைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
போர்க்கொடி தூக்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
அதிமுகவின் மொத்த உறுப்பினர்களில் 29 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதால் அதிமுக இரண்டாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சட்டவிதிகளின்படி, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்து சென்றால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. இதனால் இந்த 29 உறுப்பினர்களே ‘‘உண்மையான அதிமுக” எனக் கருதப்படவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்கள் பதவியை இழக்காமல் தவெக ஆட்சியமைக்கப் பலம் சேர்க்கமுடியும்.
இந்தநிலையில் அந்த 29 உறுப்பினர்களுடன் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் விடிய விடிய ஆலோசனை நடத்தினர். இதில் நத்தம் விஸ்வநாதன், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர்,கே.சி.வீரமணி, இசக்கி சுப்பையா, அருள்மொழி தேவன், திருத்தணி அரி, ராஜசேகர், ரவி, என்.எஸ்.ஆன் நடராஜ், ஜெயக்குமார், சுகுமார், தீலிபன், மரகதம் குமரவேல், லீமா ரோஸ், சத்யபாமா, மரகதம் வெற்றிவேல், ஹரி பாஸ்கர், ராகேஸ், மோகன், சம்பத் குமார், பாலகிருஷ்ணா ரெட்டி, முக்கூர் சுப்பிரமணியன், ராஜேந்திரன், பழனிசாமி ஆகிய 29 பேர் கலந்து கொண்டனர்.
இதில் எடப்பாடிக்குப் பதிலாக எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆக்குவது என்பது முடிவு செய்யப்பட்டது. முதலில் சட்டமன்றக் கட்சியை கைப்பற்றுவது. பின்னர் கட்சியைக் கைப்பற்றுவது என்று திட்டம் தீட்டியுள்ளனர்.
இதனால் எடப்பாடி அதிர்ச்சியில் உள்ளார். இந்நிலையில் சென்னையில் நேற்று காலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் அதிமுகவில் தற்போது புதியஅணி உருவாகியுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும் அதிமுக உடையாமல் இருக்க பதவி விலகலாமா? என்பது குறித்தும் எடப்பாடி ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதில்,சி.வி.சண்முத்துடன் சமாதானப் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து,எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், சி.வி.சண்முகத்தை சந்தித்துப் பேசியதில்,எடப்பாடி பழனிச்சாமி சரியான கூட்டணி
அமைக்கவில்லை.வேட்பாளர்களுக்கு கட்சி நிதியும் போதிய அளவு வழங்கவில்லை.கட்சியின் தோல்விக்கு
அவர்தான் காரணம்.அதனால்,அவர் பதவி விலகவேண்டும்.தவெகவுக்கு அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பது உறுதி.அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சி.வி.சண்முகம் திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது.
அதிமுக உறுப்பினர்கள் 34 பேரின் ஆதரவுக் கடிதமும் தயாரிக்கப்பட்டுள்ளது.மூன்றில் 2 பங்கு, அதாவது 32 உறுப்பினர்களுக்கு மேல் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தால் கட்சித் தாவல் சட்டம் பாயாது என சட்ட
ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது.34 பேரின் ஆதரவுக் கடிதத்துடன்,ஜோசப் விஜய்யைச் சந்திக்க சி.வி.சண்முகம் முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அதிமுக சட்டப்பேரவைக் குழுத்தலைவராக எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்வதற்கான முயற்சியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில்,நேற்று முன் தினம் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது ஒருகட்டத்தில் சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிச்சாமியை ஓங்கி அறைந்துவிட்டார் என்கிற தகவல் அதிமுகவினரிடையே பரபரப்பாகப் பேசப்படுகிறது.


