
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, எந்தக் கட்சியும் 118 தொகுதிகளைப் பெற்றிருக்காத நிலையில், சனநாயக முறைப்படி அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 163 மற்றும் 164 இன்படி தமிழ்நாடு ஆளுநர் 4 வழிமுறைகளைக் கையாண்டு அரசியல் கட்சிகளை ஆட்சியமைக்க சட்ட ரீதியாக அழைப்பு விடுக்கலாம்.
அதன்படி,
1.தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டணி அமைத்திருந்தால் அந்தக்
கூட்டணியை அழைக்கலாம்.
2.அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி போதிய ஆதரவுடன் இருந்தால் அக்கட்சியை அழைக்கலாம்.
3.தேர்தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து இருந்தால் அழைக்கப்படலாம்.
4.வெளியிலிருந்து பெறப்படும் ஆதரவுடன் பெரும்பான்மையற்ற ஆட்சியை அமைக்கும் கட்சியை அழைக்கலாம்.
இந்த நான்கு வழிமுறைகளின்படி ஆட்சியமைக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்வானவர் முதலமைச்சராக நியமிக்கப்படலாம்.
அதன்பிறகு அந்தக் கட்சியின் முதலமைச்சர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 174 இன்படி எஸ்.ஆர்.பொம்மை
வழக்கில் உச்சநீதிமன்றம் 1994 இல் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், அந்தக் கட்சி சார்பில் சட்டப்பேரவையைக் கூட்டுவார்.சட்டப்பேரவையில் ஆட்சி அமைத்த கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
அந்தக் கட்சி தனிப்பெரும்பான்மைக்கான பலத்தை, அதாவது 118 உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்பதை நிரூபித்துவிட்டால் அந்த ஆட்சி எந்தவொரு பிரச்சினையும் இன்றி தொடரும்.
ஒருவேளை, அந்தக் கட்சியால் பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் அதற்கு அடுத்த இடத்தில் உள்ள கட்சி
ஆட்சியமைக்கும் வகையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்புவிடுப்பார்.
அதன்படி, அந்தக் கட்சி தங்களது பலத்தை சட்டப்பேரவையில் நிரூபித்துவிட்டால் அந்தக் கட்சி ஆட்சியமைக்கும்.
இரண்டாவதாக அழைக்கப்பட்ட கட்சியும் ஆட்சியமைக்க முடியாவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 356 இன்படி குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்படும். அதன்பிறகு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்தப்படும்.
இதுதான் சட்டப்படியான விதிமுறைகள் எனும்போது, விஜய் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், அடுத்த பெரிய கட்சியாக இருக்கும் திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்கிற நிலை ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.


