அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ் டிடிவி – வைகைச் செல்வன் தகவல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அதிமுக சார்பில் திருவொற்றியூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதிமுக முன்னாள் சமஉ குப்பன் தலைமை தாங்கினார். மாமன்ற உறுப்பினர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வி.மூர்த்தி,முன்னாள் அமைச்சர் மற்றும் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் ஆகியோர் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

அதன்பின், வைகைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

அதிமுக, பாஜக கூட்டணி குறித்து, மேலிட பொறுப்பாளர் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

பல்வேறு கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. மிக விரைவில் கூட்டணி விவரத்தையும், கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை நிலவரங்களையும் அதிமுக பொதுச் செயலாளர் அறிவிப்பார்.

ஓபிஎஸ், டிடிவி.தினகரன் கூட்டணியில் இணைவது குறித்த கூட்டணி பேச்சுவாரத்தை நடந்து வருகிறது. விரைவில் தெரியும்.

தவெக நேற்று துவங்கிய கட்சி. விரைவில் அதன் நிலைப்பாடு தெரியவரும். தவெகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை இல்லை.

அதிமுகதான் பெரிய கட்சி. எங்களை நாடித்தான் மற்ற கட்சிகள் வருவார்கள். யாரெல்லாம் வந்துள்ளார்கள் என்பதை மிக விரைவில் அறிவிப்போம்.மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது.

2017 இல் இருந்து நான்கரை ஆண்டுகள் கூட்டணியில் பாஜக இருந்தது. அப்போது, அதிமுக நல்லாட்சி தந்துள்ளது. தேசியக் கட்சியாக, இந்தியாவை ஆளும்கட்சியாக பாஜக இருந்தாலும், தமிழ்நாட்டில் இந்தக் கூட்டணிக்குத் தலைமை தாங்குவது அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிதான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response