
தமிழீழம் யாழ்பபாணத்தில் ஆண்டு தோறும் மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக கடைபிடித்து வருகிறது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்.
இவ்வாண்டு அந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி
கிட்டு பூங்காவில் கோலாகல ஆரம்பம்
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி வெள்ளிக்கிழமை (14.11.2025) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) கார்த்திகைப் பூச்சூடி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
பசுமை இயக்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் தம்பிராசா யுகேஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இவ்விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் கௌரவ விருந்தினராகக் பங்கேற்றிருந்தார்
பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்க உரையாற்ற, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரை ஆற்றியிருந்தார். கா.சோ.சிவநேசன் வரவேற்புரையாற்ற, நிகழ்ச்சியை ந.ஐங்கரன் தொகுத்து வழங்கியிருந்தார்.
கண்காட்சித் திடல் நிறைந்த சனத்திரளுடன் இடம்பெற்ற இவ்விழாவில் நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா குழுவினரின் மரநடுகைப் பாடல் நாட்டிய நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் இம் மலர்க்கண்காட்சி எதிர்வரும் 23ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணிவரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியைப் பார்வையிடும் மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இந் நிகழ்ச்சியில் 60 மாணவர்களுக்குத் துவிச்சக்கரவண்டிகளும் (மிதிவண்டிகள்) வழங்கி வைக்கப்பட்டன.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு பொதுமக்கள் மரக்கன்றுகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆண்டுதோறும் இக்கண்காட்சியை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


