பீகார் தேர்தல் முடிவுகள் – விவரம்

243 தொகுதிகள் கொண்ட பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்தது.

அங்கு கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு, பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 68 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இறுதியாக 7.42 கோடி வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்றனர்.

அதை தொடர்ந்து இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் ஆளும் தே.ஜ. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி-ராம் விலாஸ்-29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.

இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட்-எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் களம் கண்டன.

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

நடந்து முடிந்த இரு கட்ட தேர்தலிலும் வரலாற்று சாதனையாக மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவானது. பீகார் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 46 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முதலில் அஞ்சல் ஓட்டுகளும், அதை தொடர்ந்து மின்னணு எந்திர ஓட்டுகளும் எண்ணப்பட்டன.

ஆரம்பம் முதலே பா.ஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். இந்தியா கூட்டணி கட்சியினர் தொடர்ந்து பின்தங்கி இருந்தனர். நேரம் செல்லச் செல்ல தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் முன்னிலை அதிகரித்தது.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஆட்சி அமைக்க தேவையான 122 இடங்களையும் தாண்டி 200 தொகுதிகளுக்கு மேல் அவர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வியாதவ், ராகோபூர் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தது மேலும் அதிர்ச்சி அளித்தது. 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 6 தொகுதிகளிலும், 143 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதாதளம் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ், ஆம்ஆத்மி கட்சிகள் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.

இறுதியில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி நான்கில் மூன்று பங்கு இடங்களையும் தாண்டி 202 தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 34 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றன.
இந்த வெற்றி மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி சாதனை வெற்றியை அடைந்தது.

ராகோபூர் தொகுதியில் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் சதிஷ்குமாரை தோற்கடித்து, ராகோபூர் தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். 2015, 2020ல் நடந்த தேர்தலிலும் அவர் இந்த தொகுதியில்தான் வென்றார். ஆனால் இந்தமுறை வாக்கு எண்ணிக்கையின் போது பலமுறை பின்னடைவை சந்தித்தார். இறுதியில் தேஜஸ்வி வெற்றி பெற்றார். அவர் 1,18,597 வாக்குகள் பெற்றார். பா.ஜக வேட்பாளர் சதீஷ்குமார் 1,04,065 வாக்குகள் பெற்றார்.

பீகார் தேர்தலில் லாலுபிரசாத் யாதவ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரது மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ், ஜனசக்தி ஜனதாதளம் கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். அவரும் மஹூவா தொகுதியில் களம் கண்டார். இந்த தொகுதியில் தேஜ்பிரதாப் யாதவ் 3வது இடத்தை மட்டுமே பிடித்தார். அவர் 35,703 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். சிராக் பாஸ்வான் கட்சி வேட்பாளர் சஞ்சய்குமார் சிங் 87,641 ஓட்டுகள் பெற்று இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம் வேட்பாளர் முகேஷ்குமார்42,644 ஓட்டுகள் பெற்று 2வது இடம் பிடித்தார்.

மொத்த இடங்கள் 243

பெரும்பான்மைக்கு தேவை 122

தேசிய ஜனநாயக கூட்டணி 202

இந்தியா கூட்டணி 35

ஏஐஎம்ஐஎம் 5

பகுஜன் சமாஜ் 1

ஜன்சுராஜ் 0

* தேசிய ஜனநாயக கூட்டணி

கட்சிகள் போட்டி வெற்றி

1.பா.ஜ 101 89

2. ஐக்கிய ஜனதாதளம் 101 85

3. லோக்ஜனசக்தி(ராம்விலாஸ்) 29 19

4. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 6 5

5. ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா 6 4

* இந்தியா கூட்டணி

1. ராஷ்ட்ரீய ஜனதாதளம் 143 25

2. காங்கிரஸ் 61 6

3. மார்க்சிஸ்ட் எம்எல் 20 2

4. மார்க்சிஸ்ட் 4 1

5. இந்தியா இன்குளுசிவ் கட்சி 3 1

6. இந்திய கம்யூனிஸ்ட் 6 0

7. விகாஷீல் இன்சான் கட்சி 15 0

Leave a Response