
நேற்று தமிழ்நாடு வந்தார் பிரதமர் மோடி.அவரை அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்,டிடிவி.தினகரன் ஆகியோர் சந்திக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.
மூன்று பேரும் நேரம் கேட்டிருக்கிறார்கள் என்றும் இல்லையில்லை ஓ.பன்னீர்செல்வமும் டிடிவி.தினகரனும் தான் நேரம் கேட்டிருக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்கவேயில்லை என்றும் மாறுபட்ட தகவல்கள் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தன.
ஆனால், நேற்று பிரதமர் மோடி இவர்கள் யாரையுமே சந்திக்கவில்லை.நேரம் கேட்டு கொடுக்கப்படவில்லையா? அல்லது நேரமே கேட்கவில்லையா? என்கிற தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
அதேநேரம், இவர்கள் அனைவரும்,2026 இல் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைப்பது தொடர்பாகத்தான் சந்திக்க விரும்பினார்கள்.எனவே தான் சந்திப்பு எதுவும் நடக்கவில்லை என்கிறார்கள்.
ஏனெனில் பாஜகவில் தேர்தல் கூட்டணி தொடர்பாகப் பேசும் அதிகாரம் பிரதமருக்கே இல்லை என்றும் அந்த அதிகாரம் அமித்ஷாவுக்குத்தான் இருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.
எனவே கூட்டணி தொடர்பாக அவரிடம்தான் பேசவேண்டும் என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டுவிட்டதால் பிரதமர் மோடி யாரையும் சந்திக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
அதேநேரம், அமித் ஷா ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை வர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.சென்னையில் இரண்டு நாட்கள் அவர் தங்கவிருக்கிறார்.
ஏப்ரல் 10 அன்று எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரையும் மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
அப்போது, 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஓரணியில் திரண்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 11 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர்களை அமித் ஷா சந்திக்க இருப்பதாகவும், அப்போது புதிய தமிழ்நாடு பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


