உயர்நீதிமன்றத் தீர்ப்பு – ஓபிஎஸ் மகிழ்ச்சி இபிஎஸ் அதிர்ச்சி

சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுகவில் நிலவும் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் எதிராகச் சிலர் நடந்து கொண்டது குறித்தும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2017 முதல் 2022 வரை பல்வேறு புகார் மனுக்களை அனுப்பியுள்ளேன்.

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நான் தொடர்ந்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது தேர்தல் ஆணையத்துக்கு நான் அளித்த மனுவுக்கு இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. எனவே இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் அளித்துள்ள மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், “மனுதாரர் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனு மீது, அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் பெறப்பட்டுள்ளது. விரைவில் அதுதொடர்பாக முடிவெடுக்கப்படும்,” என்றார்.

அப்போது இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர் சி.திருமாறன் ஆகியோர், “இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தங்களது தரப்புக்கு தேர்தல் ஆணையம் எந்தவொரு நோட்டீஸையும் இதுவரையிலும் அனுப்பவில்லை. இந்த வழக்கில் நாங்களும் எதிர்மனுதாரர்களாக இருக்கும்போது கண்டிப்பாக எங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி, எங்களது கருத்துகளையும் கேட்க வேண்டும். அதன்பிறகே இரட்டை இலை சின்னம் தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்,” என வாதிட்டனர்.

இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக உள்ள ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரது கருத்துகளையும் கேட்டு 4 வாரங்களில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக உரிய முடிவெடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மகிழ்ச்சியையும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response