மேகதாது சிக்கலில் திமுக குட்டிக்கரணம் விஜய்யின் தில்லி மர்மம் – பெ.ம கேள்வி

காவிரி உரிமை மீட்புக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டி,புதுச்சேரி – தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சதித்திட்டத்தில் இறங்கியுள்ள கர்நாடக அரசு.

மேக்கேத்தாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு,வெள்ளக்காலங்களில் வடிந்துவரும் வெள்ளநீர் கூட வராது.புதுச்சேரியின் காலைக்காலுக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது. தமிழ்நாடு – புதுச்சேரி காரைக்கால் உழவர்கள் தங்கள் மண்ணிலேயே வேளாண்மை பொய்த்துப் போய் ஏதிலியராக அலையும் அவலம் ஏற்படும்.

இந்நிலையில், “மேக்கேத்தாட்டு அணை எதிர்ப்பு தீர்மானம்” என்று சொல்லிக் கொண்டு,மேக்கேத்தாட்டு ஆய்வுத் தீர்மானத்தை 19.06.2026 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்,அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்!

இது கடும் கண்டனத்திற்குரியது!

கர்நாடக அரசு மேக்கேத்தாட்டில் காவிரியின் குறுக்கே 67.16 ஆ.மி.க. (டி.எம்.சி) கொள்ளளவில் புதிய அணை கட்ட அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி விசாரித்துத் தீர்ப்புக்கூற இந்தியஅரசு புதிதாக மேக்கேத்தாட்டு தீர்ப்பாயம் (Mekathatu Tribunal) அமைக்கவேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாகத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பாயம் வேண்டும் என்று வலியுறுத்திப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்,தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,எங்கள் தி.மு.க.ஆட்சி 04.03.2026 அன்றே இந்தியஅரசின் நீராற்றல் துறைக்கு – மேக்கேத்தாட்டு அணை தொடர்பாகத் தீர்ப்பாயம் அமைத்திடக்கோரி கடிதம் எழுதியுள்ளது என்று பெருமையாகக் குறிப்பிட்டார்.அதற்கு விடையளித்த த.வெ.க.முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள், “நான் 26.05.2026 அன்றே (புதுதில்லியில்)அதிகாரிகளுடன் கலந்துபேசி,மேக்கேத்தாட்டுத் தீர்ப்பாயம் வேண்டும் என்பதைக் கூறிவிட்டேன்.எனது முன்மொழிவில் இதுவிடுபட்டுள்ளது.அந்த முன்மொழிவில் 4 ஆவது பத்திக்குப் பிறகு,மேக்கேத்தாட்டு குறித்து தீர்ப்பு வழங்க தீர்ப்பாயம் அமைக்கும் கோரிக்கையை இணைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பு வகிக்கும் அனைத்துக் கட்சிகளும்,இந்தத் தீர்மானத்தை (திருத்தச் சேர்க்கை உட்பட) ஆதரித்து நிறைவேற்றியுள்ளது வெட்கக்கேடானது!

கர்நாடகத்தில் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சிகள்,கன்னட இனத்தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் – தமிழ்நாடு சட்டப்பேரவையின் மேகத்தாட்டு அணை அரவணைப்புத் தீர்மானம் கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்து அமைதி காக்கின்றன.

காவிரித் தீர்ப்பாய இறுதித்தீர்ப்பிலும் (05.02.2007),உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும் (16.02.2018),அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள (allotted) தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வது பற்றி மட்டுமே விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன.புதியஅணைகள் கர்நாடகம் உட்பட எந்த மாநிலமும் கட்டுவது பற்றி எந்த உரிமையும் அத்தீர்ப்பு வழங்கவில்லை.

மேக்கேத்தாட்டு அணையை முற்றிலும் எதிர்ப்பதாக இத்தனை ஆண்டுகளாகக் கூறி வந்த தி.மு.க.,கடந்த 04.03.2026 அன்று அந்நிலைப்பாட்டைக் கைவிட்டு,மேக்கேத்தாட்டு கட்டலாமா வேண்டாமா என்று விசாரித்துத் தீர்ப்பு வழங்க தீர்ப்பாயம் அமைக்கலாம் என்று குட்டிக்கரணம் போட்டதன் உள்நோக்கம் என்ன? காவிரி உரிமை மீட்கப்படும் என்று கர்ஜித்து வந்த விஜய் – வெளியே சொல்லாமலேயே புதுதில்லி அதிகாரிகளுடன் மேக்கேத்தாட்டு தீர்ப்பாயம் பற்றி 26.05.2026 அன்றே பேசிவிட்டதாகச் சொன்ன மர்மம் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 19.06.2026 அன்று மேக்கேத்தாட்டு தீர்ப்பாயம் கோரி தீர்மானம் நிறைவேற்றியது தமிழினத்திற்கு செய்த மிகப்பேரிய துரோகம்! ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் தவறை உணர்ந்து,அந்தத் தீர்மானத்தை மறுத்து – மேக்கேத்தாட்டு தீர்ப்பாயம் கோராத – காவிரி உரிமை நீர் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கவேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்தும் மறு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்! புதுச்சேரி சட்டப்பேரவையும் மேக்கேத்தாட்டு அணைக்கு எதிராக தீர்மானம் இயற்றவேண்டும்!

1.புதுச்சேரி அரசே,மேக்கேத்தாட்டு அணை கூடவே கூடாது என ஒற்றைவரித் தீர்மானம் இயற்றுக!

2.கர்நாடகத்தின் அடாவடியை முறியடிக்க,கர்நாடகப் பொருட்களுக்கும்,வணிக நிறுவனங்களுக்கும் தடை விதித்து பொருளியல் முடக்கத்தை அறிவித்திடுக!

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி,புதுச்சேரி அண்ணாசிலை அருகே,வரும் வியாழன் (25.06.2026) அன்று காலை 10.30 மணிக்கு,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்,புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

காவிரி காக்க – அனைவரும் வாருங்கள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response