தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.இந்நிலையில் மதுபான விற்பனைக்கு தனி செயலி மற்றும் இணைதளம் இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இணையதளம் மூலம் எப்படி மதுபானம் வாங்குவது என்பது குறித்த விளக்க காணொலி ஒன்றையும் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
முன்பதிவுக்கான இணையதளத்தில் நுகர்வோர் முதலில் தங்கள் அருகில் உள்ள கடையைத் தேர்வு
செய்யவேண்டும்.அதன்பின் தங்களுக்குத் தேவையான மதுவகையைத் தேர்வு செய்யவேண்டும்.பணம் செலுத்தும் பக்கத்தில் கைபேசி எண் கொடுத்து கடவுச்சொல் பெற்று,அதைப் பதிவுசெய்து பணம் செலுத்தவேண்டும். இதையடுத்து,கியூஆர் குறியீடு கொண்ட ரசீது வரும்,அதை பதிவிறக்கம் செய்து,முன்பதிவு செய்த கடைக்குச் சென்று கடைப்பணியாளரிடம் காண்பிக்கவேண்டும்.
கடைப்பணியாளர் கடையில் உள்ள கருவி முலம் முதலில் நுகர்வோரின் ரசிதை பதிவு செய்வார்.பின்னர்
நுகர்வோர் பதிவுசெய்து வந்த மதுபானத்தை எடுத்து அதையும் பதிவு செய்வார்,இரண்டும் சரியாக உள்ளது
உறுதியான பிறகு ரசீதை அச்சிடும் பக்கம் வரும்.அதில் ரசீதை அச்சிட்டு மதுபானத்தை நுகர்வோரிடம்
வழங்குவார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை இன்றுமுதல் வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது….
தமிழகத்தில் டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது நடைமுறைக்கு
வரவிருப்பதாகவும்,அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4,048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன.அவற்றின் விலை எவ்வளவு என்பதை கண்டறிந்து முன்பதிவு செய்யமுடியும். இது மதுவணிகத்தையும்,மதுப்புழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும்.ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பது அரசுக்கு பெருமை சேர்க்காது.எனவே,மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மது முன்பதிவு
திட்டத்தை தமிழக அரசு கைவிடவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


