விஜய் அரசின் நாடகத்தீர்மானம் – தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்

நிதிப்பகிர்வு குறித்த விஜய் அரசின் நாடகத்தீர்மானம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் விடுத்துள்ள அறிக்கையில்….

7-8-2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டுக்கான இந்திய அரசின் நிதிப்பகிர்வு குறித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் “பாலுக்கும் காவல், புனைக்கும் தோழன்” என்ற வகையில் அமைந்த “நாடகத் தீர்மானமாக” இருக்கிறது.தமிழ்நாடு அரசின் சார்பில் முன்மொழியப்பட்டு,அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் சார்பில்,நிதிஅமைச்சர் மரியவில்சன் முன்மொழிந்த தீர்மானம் எந்தக் குறிப்பான கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.“மத்திய அரசின் வரிவருவாய் பகிர்வானது சமநீதி,ஞாயம்,மாநிலத்தின் நிதிதிரட்டும் திறன்,ஆட்சி நிர்வாகத்தின் செயல்திறன்,அம்மாநிலத்தின் வளர்ச்சித் தேவைகள் ஆகியவற்றை மனதில் கொண்டும்,மக்கள்தொகைப் பெருக்கத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய,மற்றும் மனிதவள மேம்பாட்டில் முன்னேறிய மாநிலங்களைப் பாதிப்பதாக இல்லாமலும் அமையவேண்டும்.இதற்கு ஏற்ப மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வு ஏற்பாடுகள் அமையவேண்டும்” என்று பொதுப்படக் கூறிச்செல்கிறது.

இத்தீர்மானத்தின் மீது பேசிய தி.மு.க. உறுப்பினர் – முன்னாள் நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு,மொத்த வரிவருவாயில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதிப்பங்கு 16-ஆவது நிதிஆணையம் அறிவித்துள்ள 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்படவேண்டும் என்ற திருத்தத்தை மட்டும் முன்வைத்தார். தமிழ்நாட்டிற்கு என்ன வேண்டும் என்று எதையும் கோரவில்லை.

இத் தீர்மானத்தின் மீது பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,“நிதிஆணையத்தின் நிதிப்பகிர்வு முறைமை.தமிழ்நாடு போன்ற இயற்கை அமைப்பில் காடுகளின் பரப்பளவு குறைவாக இருக்கிற மாநிலத்தை, அதேபோல்,மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் திறனோடு செயல்பட்ட மாநிலத்தை வஞ்சிப்பதாக அமைந்துவிடக்கூடாது” என்றுதான் பேசினார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “வழவழா“ தீர்மானம் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும்,தேவையையும் நாட்டு முன்னேற்றத்தில் அதன் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு இந்திய அரசின் வரிவருவாய் பங்கீடு அமையவேண்டும் எனப் பொதுப்படப் புலம்பியது.வேறு எதுவும் உருப்படியாக இல்லை.குறிப்பான கோரிக்கை இல்லாத இந்தத் தீர்மானம்,தமிழ்நாடு நிதிவகையில் இந்தியஅரசால் புறக்கணிக்கப்படுவதைக் கவனத்தில் கொண்டு விழிப்போடு இருக்கிறோம் என மக்களுக்குப் படம் காட்டுகிறதே தவிர,பயன்தரத் தக்கதாக இல்லை.உரிமை கோருவதாகக் கொஞ்சமும் இல்லை.

நிதி உரிமை கோரியதாகவும் இருக்கவேண்டும்,இந்தியஅரசின் முகம் கொஞ்சமும் கோணக்கூடாது என்று அமைந்துள்ள வழக்கமான திராவிடபாணி தீர்மானமாக,த.வெ.க. அரசின் இத்தீர்மானம் இருக்கிறது.

வரிவிதித்து வசூலிக்கிற முழுஅதிகாரமும் மாநிலத்திற்கே வேண்டும் என்ற அடிப்படையான கூட்டரசுக் கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும் என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கை.அது ஒருபுறமிருக்கட்டும். குறைந்தது,இந்தியஅரசு தமிழ்நாட்டில் திரட்டுகிற வரிவருவாயில் 50 விழுக்காடு அளவு தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டும் என்ற குறைந்தபட்சக் கோரிக்கை கூட த.வெ.க.அரசும்,தி.மு.க.,அ.தி.மு.க.போன்ற கட்சிகளும் இதில் முன்வைக்காதது,பெரும் ஏமாற்றமாக இருக்கிறது.தமிழ்நாட்டுக் கட்சிளே தமிழ்நாட்டை வஞ்சிப்பதுபோல் உள்ளது.

இந்திய அரசு இப்பொழுது மாநிலங்களில் வசூலிக்கும் வரியில் 41 விழுக்காடு மாநிலங்களுக்குத் திருப்பித் தருவதாகச் சொல்கிறது.ஆனால்,உண்மை என்ன? தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வசூலித்த வரியில் 41 விழுக்காட்டை எடுத்து,பீகார்,மத்தியப் பிரதேசம்,உத்திரப்பிரதேசம் போன்ற இந்தி மாநிலங்களுக்கும் மற்ற சில மாநிலங்களுக்கும் 50 லிருந்து 60 விழுக்காடு அளவுக்கு திருப்பிக்கொடுக்கிறது.ஆனால்,தமிழ்நாட்டில் இந்தியஅரசு வசூலித்த வரியில் 27 விழுக்காடு மட்டுமே தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது.41 விழுக்காடு அல்ல.

இந்த நிலையில்,இதை ஏன் அனைத்துக்கட்சிகளும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானத்தில் தெளிவாகக் குறிப்பிடவில்லை? இந்தியஅரசு தமிழ்நாட்டில் வசூலித்த தொகையில் 41 விழுக்காடும் வந்துவிடுவது போலவும், இதை 50 விழுக்காடாக உயர்த்தவேண்டும் என்று கேட்பது போலவும் தோற்றம் அளிக்கிறது.எனவே,தமிழ்நாட்டை வஞ்சிக்கும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே நிறைவேற்றி இருப்பது கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு அரசு சார்பில் இதற்கொரு திருத்தமாவது சொல்லுங்கள்.இந்திய அரசு தமிழ்நாட்டில் வசூலித்த மொத்த வரியில் 50 விழுக்காடு நிதி தமிழ்நாட்டுக்கு அளிக்கப்படவேண்டும் என்று இந்தியஅரசைக் கோருவதாக ஒரு திருத்தத்தை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

பிரித்தானிய ஆட்சி இந்திய துணைக்கண்டத்தைக் கொள்ளை அடித்ததை விட இந்தியஅரசு தமிழ்நாட்டில் அடிக்கிற வரிக்கொள்ளையும்,வளக்கொள்ளையும் மிகமிக அதிகம்.உண்மையில்,காலனியச் சுரண்டலுக்கு உள்ளான மண்ணாக தமிழ்நாடு அல்லல்படுகிறது.

இந்த அவலச் சூழலில்கூட தமிழ்நாடு அரசோ,சட்டமன்றத்தில் அரசியல் கட்சிகளோ தமிழ்நாட்டின் உரிமைகளை உறுதியாக வலியுறுத்த முன்வரவில்லை என்பது கவலை அளிக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக விழிப்புணர்வுள்ள இளையோர்,தமிழ்நாட்டின் நிதிஇறையாண்மையை வலியுறுத்தி,கட்சிகள் கடந்து ஒன்றுதிரளவேண்டும்.தமிழ்நாடு மீள அது ஒன்றுதான் வழி எனத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response