பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கு உரிமையான மக்கள் தொலைக்காட்சியின் சட்ட விரோத பணி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் வெற்றி கிடைத்திருப்பதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்….
காட்சி ஊடகங்களில் கொத்துக்கொத்தாக ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வது அதிகரித்து வருகிறது. இப்படித்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் டிவியில் 50க்கும் மேற்பட்டோர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த போதும் நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை.
மக்கள் டிவியின் சட்ட விரோதப் பணி நீக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (MUJ) வழிகாட்டலில், தொழிலாளர் துறை இணை ஆணையரிடம் ஊழியர்கள் முறையிட்டனர். அங்கு நடைபெற்ற விசாரணையில், மக்கள் டிவி நிர்வாகம் எந்த உடன்பாட்டுக்கும் வர மறுத்தது. மேலும் சட்ட விரோத பணி நீக்கத்தை நியாயப்படுத்தியது.
இதனால் தொழிலாளர் துறை இணை ஆணையர், உடன்பாட்டு முயற்சி தோல்வி அடைந்ததாக அறிக்கை கொடுத்தார்.
இதனை அடுத்து, தொழிலாளர் நீதிமன்றத்தின் கதவு தட்டப்பட்டது. தொழில் தகராறு சட்டம் 2(ஏ)ஏ பிரிவின் கீழ் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில், எம்யுஜெ பொதுச் செயலாளர் மணிமாறன் உட்பட 17 பேர் வழக்குத் தொடர்ந்தனர். இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், மக்கள் டிவி நிர்வாகம் பேச்சு நடத்த அழைத்தது. தொழிலாளர் நீதிமன்றத்தில் உள்ள சமரசத் தீர்வகத்தில், நீதிபதி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அங்கும் நடைபெற்ற நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, ஆட்குறைப்பு இழப்பீடு (Retrenchment Compensation), போனஸ் நிலுவை, கொரோனா ஊரடங்கு காலத்தில் பிடிக்கப்பட்ட ஊதியம் ஆகியவற்றை வழங்க மக்கள் டிவி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து வழக்குத் தொடர்ந்திருந்த 17 பேருக்கும் உரிய தொகைகளைக் கணக்கிட்டு, காசோலைகளாக நிர்வாகம் வழங்கியது.
வழக்குரைஞர்கள் கார்க்கி வேலன், சபாபதி ஆகியோர் தொடக்கம் முதலே உடனிருந்து வழக்கை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தனர்.
ஊடக நிறுவனங்கள் ‘திறமையாக’ கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு பணிநீக்கம் செய்தாலும், தொழில் தகராறு சட்டத்தின்படி இழப்பீடும், பணி வாய்ப்பும் பெற முடியும்.
மக்கள் டிவியைப் பொருத்தவரை ஏற்கனவே பணிக்கொடை (கிராஜூவிட்டி) பெற்று விட்டதால், பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆட்குறைப்பு இழப்பீடும் (Retrenchment Compensation), நிர்வாகம் தரவேண்டிய நிலுவைத் தொகையும் (Dues) போராடிப் பெறப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கியத்துவங்கள்..
• கொரோனா காலத்தில் சம்பளப் பிடித்தம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பதாக தொழில் நிறுவனங்கள் சொல்லி வந்த நிலையில், அதனை உடைத்து கொரோனா ஊரடங்கு காலப் பிடித்தங்களைத் திரும்பப்பெற்றது.
• ஊடகத்துறையில் வழக்குத் தொடர்ந்து ஆட்குறைப்பு இழப்பீடு (Retrenchment Compensation) பெற்றது.
• போனஸ் என்பது சட்டப்படி வழங்கப்பட வேண்டிய ஒன்று. அதனை முறையாக வழங்குவது நிர்வாகத்தின் கடமை என்ற அடிப்படையில், போனஸ் நிலுவைத் தொகையைப் பெற்றது.
• ‘பாட்டாளிகள்’ என்று சொல்லிக் கொண்டே பாட்டாளிகளை நடுத்தெருவில் நிறுத்திய மக்கள் டிவி நிர்வாகத்திடம் எதுவும் பெற முடியாது என அவநம்பிக்கை ஊட்டப்பட்ட நிலையில், அதனை முறியடித்து ஊழியர்களின் உரிமையை பாதுகாத்திருப்பது.
• அண்மையில், ஊடகத்துறையில் அதிகமான ஊழியர்கள் வழக்குத் தொடர்ந்து இழப்பீடு பெற்றிருப்பது.
எனவே, ஒற்றுமையும் உரிமைக்கான போராட்டமும் மட்டுமே பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறை ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்கும். ஒன்றுபடுவோம்; வலிமையான சங்கத்தைக் கட்டமைப்போம்.
சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின் தொடர் பயணத்தில், அடைந்திருக்கும் இந்த வெற்றி,அடுத்தடுத்து பணி நீக்கப்படும் ஊடகத்துறை ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும்.
எல்.ஆர்.சங்கர் – தலைவர்
வ.மணிமாறன் – பொதுச்செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ)
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.