சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அரசு செலவில் அலுவலர்களை தனது தனிப்பட்ட நிறுவனங்களுக்காகப் பயன்படுத்தியதாகவும், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் காவல்துறையில் புகார் அளித்தார்.
விசாரணையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி அதில் பல்வேறு நபர்களைப் பங்குதாரராக இணைத்துள்ளதாகவும், அரசு ஊழியர் வர்த்தகம் சார்ந்த நிறுவனத்தை தொடங்க அனுமதி இல்லாத நிலையில் துணைவேந்தர் ஜெகநாதன் பங்குதாரராக இருந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டது.
மேலும், பெரியார் பல்கலைக்கழக எஸ்சி, எஸ்டி பட்டியலின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகரக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், 2021 இல் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற ஜெகநாதன் பதவிக்காலம் இன்றுடன்( ஜூன் 30,2024) முடிகிறது. இதனால் ஜெகநாதன் தனது பதவிக்காலத்தை நீட்டிக்கச் செய்யும் வகையில், ஆளுநர் மாளிகையில் காய்நகர்த்தி வந்தார்.
அதே சமயம், கடந்த 3 ஆண்டுகளாகப் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இவருக்கு, பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 500 பக்கங்கள் கொண்ட மனுவை அனுப்பினர்.
கடந்த 24 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடந்த உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் ஷாநவாஸ், சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ,”சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும். உயர்கல்வித்துறை சார்பில் நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது’ எனக் கூறி இருந்தார்.
ஜெகநாதன் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான ஆயத்தப் பணிகளை பல்கலைக்கழக நிர்வாகம் தொடங்கியது. குறிப்பாக, புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் இடம்பெற, சிண்டிகேட் சார்பில் முன்னாள் துணைவேந்தர் தங்கராசு மற்றும் செனட் சார்பில் பாஸ்கரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, அதன் விவரம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், தேடுதல் குழுவின் அமைப்பாளரை நியமிக்காமல், ஒரு மாதத்திற்கும் மேலாக ஆளுநர் மாளிகை காலம் தாழ்த்தி வந்தது.
இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025 மே மாதம் வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
ஜெகநாதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள், பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் சங்கத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
துணைவேந்தராக ஜெகநாதன், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பதவியேற்றார். அப்போது முதல் தற்போது வரை, அவர் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த புகார்கள் தொடர்கிறது. பல்கலைக்கழகத்திற்கான உபகரணங்கள் கொள்முதலில் ஊழல், பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாதது, விதிமுறைகளை மீறி தனிப்பட்ட பயணங்களுக்கு பல்கலையின் பணத்தைச் செலவழிப்பது, அரசின் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழக வளாகத்தில் தனியார் நிறுவனம் தொடங்கியது, தொழிலாளர்கள், ஆசிரியர்களை மிரட்டி மெமோ கொடுப்பது, பணியிடை நீக்கம் செய்வது, சங்க நிர்வாகிகளைப் பழிவாங்குதல், சாதிரீதியாகச் செயல்படுதல், தன்னிச்சையான செயல்பாடுகளால் பல்கலையில் தொடர்ந்து அசாதாரண சூழலை உருவாக்குவது என்று சர்ச்சைகளும், புகார்களும் ஏராளமாக உள்ளன.
இவ்வளவையும் மீறி மீண்டும் அவருக்குப் பதவி நீட்டிப்பு கொடுத்தது தொடர்பாக,
பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன், தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு, தமிழக ஆளுநர் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தற்பொழுது 70 வயதை அடையவிருக்கும் துணைவேந்தருக்கு, மேலும் பணி நீட்டிப்பு வழங்குவது, திறமையானவர்களின் குரல்வளையை நெறிப்பது போல உள்ளது. ஆளுநரின் இந்தச் செயல், தமிழக அரசுக்குச் சவால் விடுப்பது போல உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, ஒருமித்த குரலை எழுப்ப வேண்டும். பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள், விதிமுறை மீறல்கள், பட்டியல் இனத்திற்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு பல்வேறு கண்டனங்களைச் சந்தித்து வரும் துணைவேந்தருக்கு, பணி நீட்டிப்பு வழங்கியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழக அரசு 2 முறை, பொறுப்பு பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய அறிவுறுத்தியும், அதை மதிக்காமல் தமிழக அரசுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில், அவரைப் பணியிலிருந்து விடுவித்தார். பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு, பெரியார் பல்கலைக்கழகத்தைப் பாழ்படுத்தி வரும் ஜெகநாதனுக்கு, பதவி நீட்டிப்புக் கொடுத்ததன் மூலம், இந்த ஊழலுக்கு எல்லாம் ஆளுநர் துணை போகிறாரா? என்பதை அறிய விரும்புகிறோம். தமிழக அரசு துணைவேந்தரை விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி எங்களது கூட்டியக்கம் சார்பில் சட்ட வழியிலும், அறவழியிலும் மிகப்பெரிய போராட்டங்களை, வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்க உள்ளோம். மேலும் தமிழக அரசு, இவர் மீதான கிரிமினல் வழக்குகளை துரிதப்படுத்தி, இவருக்கும் இவருடைய கூட்டாளியான முன்னாள் பதிவாளர் தங்கவேலுவுக்கும் உரிய தண்டனையைப் பெற்றுத் தரவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, செயலாளர் அரவிந்தசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் மீது, 6 குற்றச்சாட்டுகளும், பதிவாளர் தங்கவேல் மீது 8 குற்றச்சாட்டுகளும், தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி மீது 8 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதன் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். தற்போது துணைவேந்தரின் பதவிக் காலம் முடிந்து விட்ட நிலையில், அவரை மாற்றாமல் பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ்சுக்கு ஆதரவாகச் செயல்படும் நபர் குற்றவாளியாக இருந்தாலும், அவருக்கு பணிநீட்டிப்பு வழங்குவது ஆளுநரின் இந்துத்துவா அரசியலை முன்னிறுத்துகிறது. குற்றவாளியாகக் கருதப்படும் ஜெகநாதனுக்கு பதவிக்காலம் நீட்டித்திருப்பதை திரும்பப் பெறவேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.