நீட் தேர்வை இரத்து செய்தால்தான் இறுதிநிகழ்வு – அனிதா குடும்பத்தினர் முடிவு

நீட் கொடுமையால் தகுதியிருந்தும் மருத்துவம் படிக்கமுடியாமல் போனதால் மனம்நொந்த மாணவி அனிதா, நேற்று தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இந்நிகழ்வு தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், அனிதா தற்கொலைக்குக் காரணமான நீட் தேர்வை இரத்து செய்யக்கோரி சென்னை சிந்தாதிரிப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் முன்பிலிருந்து முழக்க அட்டைகள், கொடிகளுடன், புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஊர்வலமாக வந்தனர். அதில் சிலரை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பே காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களை மீறி வந்த மற்ற போராட்டக்காரர்கள் சென்னை ஓமந்தூரார் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அருகே போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மாணவர்களுடன், பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழகம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை இரத்து செய்யக்கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல மாணவி அனிதா மரணத்துக்கு நீதிகேட்டு, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனிதாபோல மாணவர்கள் தற்கொலைகளைத் தடுக்க, நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டுமென அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.

கோவை நஞ்சப்பா ரோட்டில் புதிதாகக் கட்டப்படும் மேம்பாலத்தின் மீது ஜல்லிக்கட்டு ஆதரவுக்குழுவினர் அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்படி தமிழகமெங்கும் போராட்டங்கள் நடக்கும் இதேவேளையில் அனிதாவின் உடலத்துக்கு வணக்கம் செலுத்தச் செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறதாம்.

அனிதாவின் இறுதிநிகழ்வுகளை உடனே நடத்தவேண்டாம் என அங்கிருப்போர் முடிவு செய்திருக்கிறார்களாம். இதுபற்றிக் குழுமூரில் இருக்கும் ஒருவர் கூறியதாவது,,,

நீட் தேர்வை இரத்து செய்யும் வரை மாணவி அனிதாவின் உடலை எடுக்கமாட்டோம் என்று அனிதாவின் குடும்பத்தினர் உட்பட குழுமூரில் கூடியிருக்கும் அனைவரும் முடிவெடுத்துள்ளோம். அதுவரை போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வு இரத்து செய்யப்படும் வரை தமிழகம் முழுவதும் போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுப்பதே மாணவி அனிதாவிற்கு வழங்கும் நீதியாக இருக்கும். மேலும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் மாணவி அனிதாவின் ஊரான அரியலூர் மாவட்டம் குழுமூர் சென்று போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response