அனிதா மரணம் குறித்து கிருஷ்ணசாமி எதிர்மறையாகப் பேசுவது ஏன்? – சீமான் விளக்கம்

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்குப் பெற்று தராத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன் பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகள் தமிழகத்துக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளன. கல்வி, மருத்துவம், ஆகியவை இன்று வியாபாரமாகிவிட்டன. 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மாணவி அனிதாவால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.

இதற்கு நீட் என அழைக்கப்படும் தேசிய தகுதித் தேர்வே தடையாக இருந்தது. மாணவி அனிதாவின் மரணம் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அவரது கனவை ஆட்சியாளர்கள் கலைத்து விட்டனர். மருத்துவக் கனவோடு சேர்ந்து அவரது உயிரும் பறி போய்விட்டது.

சிறுவயதில் இருந்தே மருத்துவப் படிப்பின் மீது மாணவி அனிதா மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தார். அவரது தாய் இறந்து விட்ட நிலையில் கூலித் தொழிலாளியான தந்தையும் வேலைக்குச் செல்லும் குடும்பச் சூழலே இருந்துள்ளது. இதனால் சரியான ஆறுதலும், தேறுதலும் கிடைக்காமல் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பல முறை நீட் தேர்வு விலக்குக்காக டெல்லி வரை சென்று சட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி அனிதாவுக்கு அதுவும் தோல்வியில் முடிந்த காரணத்தினாலேயே இந்த முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். அவரது சாவுக்கு மத்திய மாநில அரசுகளே முழுக் காரணம்.

மாணவி அனிதாவைப் போல இன்று பல மாணவர்கள் கிராமப்புறங்களில் நடை பிணமாகவே வாழ்ந்து வருகிறார்கள். தமிழக மாணவர்கள் பலரின் மருத்துவக் கனவு தகர்ந்துள்ளது. இத்தனை ஆண்டு காலமும் ‘நீட்’ தேர்வு எழுதாமல் மருத்துவர்கள் ஆன அனைவரும் தகுதி இல்லாதவர்களா?

‘நீட்’ தேர்வு இருந்தால்தான் தகுதியான மருத்துவர்களை உருவாக்க முடியுமா? இன்று ‘நீட்’ தேர்வால் தமிழக மாணவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளை ‘குளோபல்’ நுழைவுத் தேர்வு வரப் போகிறது. அப்போது இந்திய மாணவர்கள் அனைவருக்குமே பாதிப்பு ஏற்படும்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் தமிழர்கள் சாகும் நிலை இருந்து வருகிறது. அன்று இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து முத்துக்குமார் உயிர் நீத்தார். 3 அண்ணன்களை தண்டனையில் இருந்து விடுவிக்க செங்கொடி உயிர் நீர்த்தாள்.

மாணவர்கள் உரிமைக்காக தம்பி விக்னேஷ் உயிர் நீத்தான். இன்று கல்வி உரிமைக்காக தங்கை அனிதா உயிரிழந்திருக்கிறார். அவரது குடும்பத்துக்கு அரசு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. அவரது கனவைத் தகர்த்து விட்டு அவர் இல்லாத நிலையில் நிதி உதவி செய்திருப்பது மிகப் பெரிய கொடுமையாகும்.

எனவே ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இனியாவது நிரந்தர தீர்வை பெற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் (நாம் தமிழர் கட்சி) அதிகாரத்துக்கு வந்த பிறகு செய்து காட்டுவோம்.

கேள்வி:- மாணவி அனிதா உயிரிழந்ததை அரசியலாக்குவதாக பா.ஜனதா கூறியுள்ளதே?

பதில்:- எச்.ராஜா போன்றவர்கள் இது போன்று பேசி வருகிறார்கள். எனக்குப் பசிக்கிறது. சோறு கொடு என்று கேட்பது கூட அரசியல்தான். ஆனால் எனது தங்கை நான் படித்திருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடு என்று தான் கேட்டாள். அனிதாவின் மரணம் பற்றி கூட பேசக் கூடாது என்று பா.ஜனதா நினைக்கிறார்களா? அவர்களுக்கு வேறு வேலை இல்லை.

கே:- ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் பலர் உணர்ச்சியை தூண்டுவதாக கிருஷ்ணசாமி கூறியுள்ளாரே?

ப:- அவர் அப்படித்தான் கூறுவார். நாங்கள் உணர்ச்சியைத் தான் தூண்டி வருகிறோம். ‘நீட்’ தேர்வு எழுதி விட்டா அவர் மருத்துவர் ஆனார். ஆனால் இன்று அவரது 2 பிள்ளைகளும் மருத்துவர்களாக இருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் ஆஸ்பத்திரி கட்டிக் கொண்டிருக்கும் அவர் இப்படித்தான் பேசுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response