அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து நடத்திய 9 ஆவது டி20 உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக தகுதிச் சுற்றில் பங்கேற்றன.
இந்தச் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறின. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் தகுதிச் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறிய நிலையில், கற்றுக்குட்டி அணியான அமெரிக்கா சூப்பர்-8 இல் இடம் பிடித்தது.
சூப்பர்-8 சுற்றின் முடிவில் முதல் பிரிவில் இருந்து இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளும், 2 ஆவது பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்கா இங்கிலாந்து அணிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
ஆப்கான் அணி முதல் முறையாக உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்தது. முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
2 ஆவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 68 ரன் வித்தியாசத்தில் பந்தாடிய இந்திய அணி 3 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் பரபரப்பான இறுதிப்போட்டியில், இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகள் நேற்று மோதின.
இரு அணிகளும் நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்ததால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
பிரிட்ஜ்டவுன், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி ஜூன் 29 அன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று மட்டை பிடித்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. அதிகபட்சமாக கோலி 76 ரன் விளாசினார். அக்சர் 47, துபே 27 ரன் எடுத்தனர்.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. டிகாக் மற்றும் ரீசா ஹென்ரிக்ஸ் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.
இரண்டாவது ஓவரில் ஹென்ரிக்ஸை அவுட் செய்தார் பும்ரா. அடுத்த ஓவரில் அந்த அணியின் தலைவர் மார்க்ரமை அவுட் செய்தார் அர்ஷ்தீப். அதன் பிறகு ஸ்டப்ஸ் உடன் இணைந்து 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் டிகாக். 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். அவரை அக்சர் படேல் அவுட் செய்தார்.
தொடர்ந்து வந்த கிளாசன் உடன் இணைந்து 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் டிகாக். அவர் 39 ரன்களில் அர்ஷ்தீப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அதிரடியாக ஆடி மிரட்டினார் கிளாசன். டேவிட் மில்லருடன் இணைந்து 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்தார். 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.
17 ஆவது ஓவரின் முதல் பந்தில் கிளாசன் விக்கெட்டை வீழ்த்தினார் பாண்டியா. அப்போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து இருந்தது தென் ஆப்பிரிக்கா. அந்த அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்களை மட்டுமே பாண்டியா கொடுத்திருந்தார். அந்த ஓவர் இந்திய அணிக்கு ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
18 ஆவது ஓவரை பும்ரா வீசினார். முதல் இரண்டு பந்து டாட். அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார் மில்லர். நான்காவது பந்தில் யான்சன் விக்கெட்டை வீழ்த்தினார். பந்து ஸ்டம்புகளை தகர்த்தது. கேஷவ் மகாராஜ் பேட் செய்ய வந்தார். ஐந்தாவது பந்தும் டாட் ஆனது. அடுத்த பந்தில் மகாராஜ் சிங்கிள் எடுத்தார்.
கடைசி 12 பந்துகளில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. 19 ஆவது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். ஸ்ட்ரைக்கில் மகாராஜ் இருந்தார். முதல் இரண்டு பந்து டாட். மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். நான்காவது பந்தில் மில்லர் இரண்டு ரன்கள் எடுத்தார். ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். கடைசி பந்து டாட் ஆனது.
கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் மில்லர் இருந்தார். அந்த ஓவரை பாண்டியா வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார் மில்லர். பவுண்டரி லைனில் இருந்த சூர்யகுமார் யாதவ் அசத்தல் கேட்ச் பிடித்து கலக்கினார். பந்தை பிடித்து, அதை காற்றில் தூக்கி போட்டு, பவுண்டரி லைனுக்கு வெளியில் சென்று, மீண்டும் உள்ளே வந்து கேட்ச் பிடித்திருந்தார். மில்லர் அவுட். அது அபாரமான கேட்ச். இரண்டாவது பந்தில் பவுண்டரி விளாசினார் ரபாடா. அது எட்ஜ் ஆகி சென்றது. 4 பந்துகளில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.
மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. நான்காவது பந்தில் மகாராஜ் சிங்கிள் எடுத்தார். கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. பாண்டியா வொய்டு வீசினார். அந்த எக்ஸ்ட்ரா பந்தில் ரபாடா கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி பந்தில் 9 ரன்கள் அந்த அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. அதன் மூலம் இந்தியா 7 ரன்களில் வெற்றி பெற்றது.
அந்த அணியில் அதிகபட்சமாக கிளாஸன் 52, டி காக் 39, மில்லர் 21 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஹர்திக் 3, பும்ரா, அர்ஷ்தீப் தலா 2, அக்சர் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
2007 இல் நடந்த முதலாவது ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது ரோகித் தலைமையில் இந்தியா 2 ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு முதல் பரிசாக ரூ.20 கோடியும், 2 ஆவது இடம் பிடித்த தென் ஆப்ரிக்காவுக்கு ரூ.10 கோடியும் பரிசளிக்கப்பட்டது.
இந்திய அணியின் வெற்றியை இரசிகர்கள் நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். 2 ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எங்கள் மென் இன் ப்ளூ அவர்களின் இரண்டாவது டி20 உலகக்கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதற்காக கொண்டாடுவதில் மகிழ்ச்சி! நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனையுடன் முடித்தது. வாழ்த்துகள், இந்திய அணி
இவ்வாறு அவர் கூறியுள்ளார்,