நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரிந்துகிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் எண்ட்ரி ஆகிவிட்டேன் என்று சசிகலா பேட்டி கொடுத்தார்.
அதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியபோது…
சசிகலாவும், அவரது குடும்பமும் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர்கள். சசிகலாவை மட்டும் ஜெயலலிதா திரும்பச் சேர்த்துக் கொண்டார். அவர் கட்சியிலேயே இல்லை. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத சசிகலாவை பொதுமக்கள் எப்படி ஏற்பார்கள். எக்சிட் ஆனவரால் என்ட்ரி கொடுக்க முடியாது என்றார்.
அதேபோல ஓ.பன்னீர்செல்வம் பற்றி அவர் கூறியது….
குழப்பவாதி, சந்தர்ப்பவாதி, சுயநலவாதியான ஓ.பன்னீர்செல்வத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள். அரசியலில் அவர் ஒரு குறுநாவல். அதிமுக வரலாற்றுச் சரித்திரம் என்றார்.
அதேசமயம் வேலூர் அடுத்த ஊசூரில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது….
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக பல பிரிவுகளாகப் பிரிந்தது. இந்தச் சூழலில் அப்போது ஒன்றிய அரசான பாஜகவை எங்களால் எதிர்க்க முடியவில்லை. மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் திட்டங்களுக்காகவும், தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் அவர்களோடு அனுசரித்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவானது. பாஜகவும் அதிமுகவிற்கு உறுதுணையாக இருந்தார்கள்.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என எந்தத் தொண்டன் கூறுகிறான்? எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள்? ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் நாங்கள் முன் வைத்தோம். அப்போது தான் ஜெயலலிதா இருந்தது போல் செயல்பட முடியும் எனக் கூறினோம். ஆனால் ஓபிஎஸ் உட்பட ஒரு சிலர் அவர்களாகவே தான் வெளியே போனார்கள். நாங்கள் யாரையும் போகச் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல் இவர்களை எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளச் சொல்கிறீர்கள். வெளியில் இருப்பவர்கள் தான் பாஜகவுக்கு சாதகமாக அதிமுக கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்கள். வேறு, வேறு கூட்டணியில் நின்று தோல்வியுற்ற பிறகு ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறார்கள்.
இப்போது அவர்கள் தான் சொல்ல வேண்டும். நாங்கள் ஆதரவு தருகிறோம், எப்போது தேவைப்பட்டாலும் உங்கள் அழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எடப்பாடி தலைமையிலான அதிமுகவிற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று சசிகலா, ஓபிஎஸ் உட்பட பிரிந்து போன அனைவரும் சொல்ல வேண்டும். இப்போது கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என அறிக்கை விடுபவர்கள், எடப்பாடி தலைமையில் நாங்கள் ஒருங்கிணையத் தயாராக இருக்கிறோம் என அறிக்கை விட வேண்டும். எடப்பாடி தலைமையில் நாங்கள் அனைவரும் செயல்படத் தயாராக வருகிறோம் என அவர்கள் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று சேர வேண்டும், ஒன்று சேர வேண்டும் என கூறுகிறார்கள். அப்படி என்றால் அவர்களிடம் தலைமையைக் கொடுக்கச் சொல்கிறார்களா? என எங்களுக்குப் புரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா,ஓபிஎஸ் ஆகியோருக்கு இடமே இல்லை என்று ஜெயக்குமாரும், எடப்பாடி தலைமையை ஏற்றுக் கொண்டால் அவர்களைச் சேர்க்கலாம் என்று கே.சி.வீரமணியும் கூறியிருக்கிறார்கள்.
இதனால் சசிகலா விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பது வெளியில் வந்திருக்கிறது என்கிறார்கள்.