18 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசத்தின் 16 உறுப்பினர்கள், ஐக்கிய ஜனதா தளத்தின் 12 உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஆதரவுடன் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
இந்தச் சூழலில் 18 ஆவது மக்களவையின் முதல் அமர்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்குகிறது. மக்களவைத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் ஜூன் 26 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து,நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளச் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி கூறும்போது…
பாஜக சார்பில் பரிந்துரை செய்யப்படும் நபரை மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க நாங்கள் முழு ஆதரவு அளிப்போம் என்றார்.
அதேநேரம், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பட்டாபிராம் கொம்மரெட்டி கூறியதாவது….
மக்களவைத் தலைவர் பதவி தொடர்பாக தேசிய சனநாயகக் கூட்டணிக் கட்சிகள் முதலில் கலந்துபேச வேண்டும். இதில் கருத்தொற்றுமை ஏற்பட்டு,அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபருக்கே தெலுங்கு தேசம் ஆதரவு அளிக்கும் என்றார்.
மக்களவைத் தலைவர் பதவி இல்லாவிட்டால் தெலுங்கு தேசம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பாஜக இழுத்துக்கொள்ளும் என்று எல்லோருமே அக்கட்சியினரைப் பயமுறுத்திவருகிறார்கள்.அதனால் அக்கட்சி அப்பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்கிறார்கள்.
புதிய மக்களவைத் தலைவரைத் தேர்வு செய்வதில், தேசிய சனநாயகக் கூட்டணியின் பிரதான கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் – தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இது மோடி அரசுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுவதாவது…
18 ஆவது மக்களவை கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். மூத்த உறுப்பினர் ஒருவர் தற்காலிக தலைவராகப் பதவியேற்று, புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். மத்திய பிரதேசத்தின் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் வீரேந்திர குமார், கேரளாவின் காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகிய இருவரும் 7 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், வீரேந்திர குமார்
ஒன்றிய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். எனவே, கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிகத் தலைவராக இருந்து, புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வாய்ப்பு உள்ளது.
மக்களவைத் தலைவராக ஓம் பிர்லாவை மீண்டும் நியமிக்க பாஜக தலைமை விரும்புகிறது. ஆனால், இந்தப் பதவியை தெலுங்கு தேசமும் கோரி வருகிறது. அந்தக் கட்சியைச் சமாதானப்படுத்த ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரியை மக்களவையின் தலைவர் அல்லது துணைதலைவராக நியமிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. இவர், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரான என்.டி.ராமராவின் மகள் மற்றும் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி ஜூன் 9 ஆம் தேதி பதவியேற்றார். அப்போது முதல், இந்த ஆட்சி நீடிக்காது என்று பலரும் சொல்லி வருகின்றனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் 26 ஆம் தேதி நடக்கவிருக்கும் மக்களவைத் தலைவர் தேர்தலிலேயே கூட்டணி உடைந்துவிடும் அபாயம் இருக்கிறதென்கிறார்கள்.
பதவியேற்று பதினேழு நாட்களுக்குள்ளேயே ஆட்சிக்கு ஆபத்து எனும் செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.