திருவள்ளுவர் பாறைக்குக் கடற்பாலத் திட்டத்தில் மாற்றம் தேவை – பெ.மணியரசன் கோரிக்கை

கன்னியாகுமரி திருவள்ளுவர் பாறைக்கு விவேகானந்தர் பாறை வழியாகச் செல்லும் கடற்பாலத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கன்னியாகுமரி கடலுக்குள் இருக்கும் வள்ளுவர் பாறைக்கும் வானுயர்ந்த வள்ளுவர் சிலைக்கும் பார்வையாளர்கள் செல்வதற்கு அக்கடலில் உள்ள விவேகானந்தர் பாறையிலிருந்து கடலில் பாலம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு முயல்கிறது என்ற செய்தி கிடைத்தது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை இப்பாலம் அமைக்கும் பணியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

திருவள்ளுவர் சிலையை வணங்கவும் பார்க்கவும் செல்வோர் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள விவேகானந்தர் மண்டபங்களுக்குச் சென்றுதான் செல்ல முடியும் என்ற நிலை வந்தால், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், தமிழினப் பேராசான் திருவள்ளுவர்க்குக் காவித் துண்டுகள் அணிவித்து, வள்ளுவர் பாறையைக் காவிமயமாக்கி விடுவார்கள்.

இப்பொழுது தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குக் காவிரித் துணி போர்த்துவதும், உருத்திராட்ச மாலை இடுவதும், காவி வண்ணத்தில் திருவள்ளுவர் சித்திரங்களை, படங்களைக் காட்சிப் படுத்துவதும் ஆளுநர் மாளிகையிலிருந்து அங்காடித் தெருக்கள் வரை, ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். இரவி தொடங்கி பா.ச.க., ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் வரை செய்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். ஆன்மிகப் பாசறையாக இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்குச் சென்றுதான் திருவள்ளுவர் சிலைப் பாறையை அடைய முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டால், பேராசான் திருவள்ளுவர் கொள்கைக்குத் தமிழ்நாடு ஆட்சியாளர்களே பெருந்தீங்கு செய்வதாக அமைந்து விடும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு, விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் பாறைக்குப் பாலம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, கடற்கரையிலிருந்து நேரடியாகத் திருவள்ளுவர் பாறைக்குக் கடற்பாலம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response