பகை நாட்டு மீது போர் தொடுப்பதுபோல் விவசாயிகள் மீது தாக்குதல் – ஏர்முனை கண்டனம்

சுதந்திர இந்தியாவில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடும் உரிமையைத் தடுக்க அடக்குமுறையை ஏவும் மத்திய அரசுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறோம் என்று ஏர்முனை இளைஞர் அணி கூறியுள்ளது.

அவ்வமைப்பின் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில்….

மத்திய பாஜக அரசால் சமீபத்தில் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவிக்கபட்ட திரு எம்.எஸ்.சுவாமிநாதன் கமிசன் அறிக்கையை அமல்படுத்தக் கோருதல், விவசாய விலைபொருட்களுக்கான (MSP) குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி *டெல்லி சலோ* என்ற போரட்டத்தை அறிவித்தார்கள் விவசாயிகள்.

போராடும் விவசாயிகள் தலைநகர் டெல்லிக்குள் வந்துவிடாதபடி சாலைகளில் பெரும் ஆணிகள் பதித்து,
பிரமாண்ட கான்கிரீட் தடுப்பரண்கள் அமைத்து,வண்டி வாகனம் செல்லமுடியாதபடி மிகபெரும் பள்ளங்களை உருவாக்கி ஆயிரக்கணக்கான போலீசாரை டெல்லி எல்லைப்பகுதிகள் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுத்தி பகை நாட்டுப் படைகளை எதிர்த்துப் போரிடுவதற்கு ஆயுத்தமாவதைப் போலத் தயாரானது விவசாயிகளை இந்தியாவின் குடிமக்களாக இந்த மத்திய அரசு கருதுகிறதா? என்ற மிகப்பெரும் கேள்வியை எழுப்புகிறது.

இவ்வளவு தடைகளை அரசு தரப்பில் செய்தபோதும் அதையெல்லாம் தகர்த்து எறிந்து தலைநகர் டெல்லி நோக்கி
முன்னேறிவரும் விவசாயிகள் மீது ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம்
கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசியும் சிதறி ஓடும் விவசாயிகள் மீது கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தபடுவதும் ஜனநாயக நாட்டில் தான் நாம் வாழ்கிறோமா? இல்லை சர்வாதிகார நாட்டில் வாழ்கிறோமா? என எண்ணத் தோன்றுகிறது.

இதுமட்டுமல்ல முக்கிய விவசாய சங்கத் தலைவர்களின் சமூக வலைதளக் கணக்குகளை முடக்கியும்,போராட்டப் பகுதிகளில் செல்பேசி டவர்களின் செயல்பாட்டை நிறுத்தியும்,144 தடை உத்தரவை டெல்லிக்குள் நுழையும் பகுதிகளில் அமல்படுத்தியும் எண்ணிலடங்கா இடர்ப்பாட்டை போராடத்தை ஒடுக்குவதற்காகச் செய்யும் கொடுமையை இன்று விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது போல நாளை அனைத்து மக்கள் போராட்டங்களுக்கும் இந்த அரசு செய்யும் என்பதற்கான துவக்கமே இப்போது நடைபெறும் நிகழ்வுகள்.

நாட்டுக்கே சோறுபோடும் சொந்த நாட்டு விவசாயிகள் மீது ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம்
கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய ஓரே அரசாக வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

வட இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகளும் போராட்டக் களத்திற்கு வருவதற்கான ஒருங்கிணைப்பை செய்து விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி உறுதியாகத் துணை நிற்போம்.

போராடும் விவசாயிகள் மீதான இந்த கோழைத்தனமான தாக்குதலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response