உழவர்கள் மீது குண்டர்சட்டம் – ஏர்முனை கண்டனம்

தங்கள் நிலத்தைக் காக்கப் போராடிய உழவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள தமிழக அரசுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது ஏர்முனை இளைஞர் அணி.

அவ்வமைப்பின் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில்….

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக 3174 ஏக்கர் விவசாய விளைநிலங்களைச் சட்டத்திற்கு எதிரான முறையில் உழவர்களின் கடுமையான எதிர்ப்பை மீறி வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுவதை எதிர்த்து மேல்மா என்ற இடத்தில் 9 கிராம மக்கள் கடந்த 125 நாட்களாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டக் களத்திலுள்ள உழவர்களில் பச்சையப்பன், தேவன்,அருள்,திருமால்,சோழன், பாக்கியராஜ், மாசிலாமணி ஆகிய 7 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் தமிழக அரசின் காவல்துறை கைது செய்திருக்கிறது. 

தமிழக அரசின் இந்த அரச பயங்கரவாதம் ஓட்டுமொத்த உழவர் சமுதாயத்தையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக கடந்த 1970 ஆம் ஆண்டு  ஜூன் 19 ம் தேதி திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அன்றைய திமுக அரசு காவல்துறையை ஏவி ஒரு பைசா மின் கட்டண உயர்வுக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மாரப்பகவுண்டர்,ஆயிகவுண்டர்,இராமசாமிகவுண்டர் ஆகிய உழவர்களை ஈவு இரக்கமின்றி துப்பாக்கிச் சூட்டில் அநியாயமாகச் சுட்டுக்கொன்று தன் அரச பயங்கரவாதத்தை உழவர்களுக்கு எதிராகத் தொடங்கியது.

அன்று தொடங்கிய உழவர்களுக்கு எதிரான திராவிட முன்னேற்றக் கழகத்தின் விவசாயிகள் விரோதச் செயல்கள் இன்றுவரை தொடரந்து நீடித்துக்கொண்டே இருப்பதற்கான சான்று தான் இந்தியாவில் வேறு எந்த மாநில அரசுகளும் பயன்படுத்தாத குண்டர் சட்டத்தை போராடும் விவசாயிகளுக்கு எதிராகப் பிரயோகித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ள எதேச்சதிகாரம்.

குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவதற்கான குற்றங்களான கள்ளச்சாராய விற்பனை,மணல் கடத்தல்,பாலியல் குற்றச்செயல்,உணவுப் பொருட்கள் கடத்தல் ஆகிய எவற்றையும் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டுள்ள உழவர்கள் செய்யவில்லை என்பதை அனைவரும் அறிவர்.

அவர்கள் செய்த ஒரே தவறு செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக தங்களின் முப்போகம்  விளையும்  நிலம் பறிக்கப்படுவதைக் கண்டித்து அமைதியாக கடந்த 125 நாட்களாக அறவழியில் போராட்டம்  நடத்தியது தான்.
 
தங்களின் வாழ்வாதாரமான மண்ணைக் காக்கப் போராடிக்கொண்டிருக்கும் உழவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள உழவர் விரோத தமிழக அரசுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

அநியாயமாகக் கைது செய்யபட்டுள்ள உழவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தியும் அவர்கள் மீது ஏவபட்டுள்ள குண்டர் சட்டத்தை நீக்க வலியுறுத்தியும் செய்யாறு சிப்காட்க்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் வரும் செவ்வாய்க்கிழமை 21:11:23 காலை 10 மணிக்கு திருப்பூர் மாவட்டம் பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

உழவர்களுக்கு எதிரான தமிழக அரசின் விவசாய விரோதச் செயல்பாட்டைக் கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளான உழவர்களும் பொதுமக்களும் பங்கேற்க வேண்டுமாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response