உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் – மருத்துவர் இராமதாசு அறிவுரை

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, நேற்று காலை பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சந்தித்தனர். சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம்தென்னரசு, இராஜகண்ணப்பன் மற்றும் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் இருந்தனர்.

அப்போது முதலமைச்சரிடம் இராமதாசு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது…..

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது 83 ஆண்டு காலக் கோரிக்கை ஆகும். இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு இணையாக சமூகநீதியைப் பாதுகாக்கும் மாநிலங்களில் ஒன்றான பிகாரில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியிடப்பட்டன.

நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் சாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்த வலியுறுத்தி, அக்டோபர் 21 ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள். இதை பாமகவும் ஆதரிக்கிறது. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்பதால், மாற்று ஏற்பாடாக மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

பிரதமரும், உள்துறை அமைச்சரும் பல்வேறு மேடைகளில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராகப் பேசி வருகின்றனர். அதனால்தான் மாநில அரசே நடத்த வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாவிட்டால், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக உயர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம். இதற்கு சட்டப்படியும், அரசியல் ரீதியாகவும் எந்தத் தடையும் இல்லை. எனவே தமிழ்நாடு அரசின் சார்பில் சாதிவாரிக் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response