சென்னையில் வி.பி.சிங் சிலை திறப்பு – காரணம் என்ன?

சமூகநீதி காவலர் வி.பி.சிங்குக்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னையில் அவரது முழுஉருவச்சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 ஏப்ரல் 20 ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவித்தார். அதன்படி, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.52.20 லட்சம் செலவில் வி.பி.சிங் முழுஉருவச் சிலை அமைக்கப்பட்டது.

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழுஉருவச் சிலையை நவம்பர் 27,2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.நேற்று வி.பி.சிங் நினைவுதினம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்,வி.பி.சிங்கின் மனைவி சீதா குமாரி,மகன் அஜயா சிங்,மருமகள் ஸ்ருதி குமாரி, பேத்திகள் ரிச்சா மஞ்சரி சிங், அட்ரிதா மஞ்சரி சிங்
உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா,பொதுப்பணித் துறைச் செயலர் பி.சந்திரமோகன், செய்தித் துறைச் செயலர் ஆர்.செல்வராஜ், செய்தி, மக்கள் தொடர்பு துறை இயக்குநர் த.மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

உத்தர பிரதேச முதலமைச்சராகவும்,ஒன்றிய நிதி, வர்த்தகம், பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் வி.பி.சிங். தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு நாட்டின் பிரதமரானார். 11 மாத அவரது ஆட்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்தார்.

சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை அமல்படுத்தினார். காவிரி நீருக்காக நடுவர்மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்தார். சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராசர் பெயரையும், பன்னாட்டு விமானநிலையத்துக்கு அண்ணா பெயரையும் சூட்டினார்.

இந்நிலையில், வி.பி.சிங் நினைவுதினமான நேற்று, சென்னை மாநிலக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர், சிலை திறப்பு விழா பேருரைநிகழ்ச்சி, கலைவாணர் அரங்கில் நடந்தது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பேசியதாவது….

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங். பிறப்பால் பிற்படுத்தப்பட்டவர் அல்ல என்றாலும், ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீட்டைச் சாத்தியப்படுத்திக் காட்டினார். அவரது முயற்சியால்தான் பிற்படுத்தப்பட்டோர் ஒரு அடியாவது முன்னேறியுள்ளனர். நாம் இன்னும் பல உயரங்களுக்குச் செல்ல வேண்டும். நமக்கான உரிமைகள் இன்றும்கூட முழுமையாகக் கிடைக்காத சூழல் உள்ளது. கல்வி நிறுவனங்களில் ஓபிசி இடஒதுக்கீடு 2006-க்குப் பிறகுதான் நடைமுறைக்கு வந்தது.

பல்கலைக்கழக மானியக் குழு இணை இயக்குநர் பதவிக்கு இடஒதுக்கீடே இல்லை. ஒன்றிய அரசின் துறைச் செயலர்கள் 89 பேரில் 85 பேர் முற்பட்ட வகுப்பினர். பட்டியலினப் பிரிவில் ஒருவர், 3 பழங்குடியினர் உள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் ஒருவர் கூட இல்லை. ஒன்றிய அரசின் கூடுதல் செயலர்கள் 93 பேரில் 82 பேர் முற்பட்ட வகுப்பினர். அதிலும் பிற்படுத்தப்பட்டவர்கள் இல்லை. இணைச் செயலர்கள் 275 பேரில் 19 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள்.

ஒன்றிய சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடே இல்லாத நிலை உள்ளது. 45 மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் எண்ணிக்கை 4 சதவீதம் மட்டுமே. பல்வேறு துறைகளில் நிலைமை இப்படித்தான் உள்ளது.

நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 2018 முதல் 2023 வரை நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில், 72 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால், 458 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. அரசுத் துறை பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு அமலாகவில்லை. இந்த நிலையை மாற்ற நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். அந்தப் பணியில் இருந்து திமுக ஒருபோதும் சோர்ந்து போகாது. சமூகநீதிப் பயணத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.

சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல. எல்லா மாநிலங்களின் பிரச்சினை. சமூகநீதி தழைக்க வேண்டுமானால், தாமதப்படுத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும்போது சாதிவாரிக் கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியின மக்கள், சிறுபான்மையினர் என அனைவருக்கும் முறையாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் தேசிய அளவில் கண்காணித்து, உறுதிசெய்ய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.

நாடு முழுமைக்கும் பரவி இருக்கும் சமூகநீதிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். வி.பி.சிங்குக்குச் சிலை வைப்பதன்மூலம் அவருக்குக் காட்ட வேண்டிய நன்றியைத் தெரிவித்துள்ளோம். வி.பி.சிங் மற்றும்அவரது தியாக வாழ்வு பற்றி நாட்டில் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக, இளைஞர்களுக்கு அவரது வாழ்வு திரும்பத்திரும்பச் சொல்லப்பட வேண்டும் என்பதால்தான், மாநிலக் கல்லூரியில் சிலை அமைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில் வி.பி.சிங் மகன் அஜயா சிங் பேசும்போது….

எனது தந்தைக்குச் சிலை அமைத்த தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைட் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். வி.பி.சிங் தனது அனுபவங்கள் குறித்துஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையை அவர் வாசித்தார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் வி.பி.சிங் பேத்தி ரிச்சா மஞ்சரி சிங் கூறும்போது,

தேசிய அளவில் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், தாத்தாவின் சிலை இங்கு திறக்கப்பட்டிருப்பது பெருமையாக உள்ளது. மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது, பலருக்கும் அவர் வில்லனாகட் தெரிந்தார். அவர் செய்தது எவ்வளவு சவாலான விசயம் என்பது இப்போதுதான் தெரிகிறது.அவர் அப்போது மேற்கொண்ட இந்தசிறப்பான முயற்சிதான் தற்போது சமூகத்தில் சரியான அளவு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.

Leave a Response