விடிய விடிய மழை – சென்னை திருவள்ளூர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்த டிட்வா புயல் மாலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. ஆனால், நகரும் வேகம் குறைவாக இருந்தது. பின்னர் அது வடக்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 50 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு வட கிழக்கே 120 கிமீ தொலைவிலும், கடலூருக்கு வட கிழக்கே 130 கிமீ தொலைவிலும் நேற்று நிலை கொண்டது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதி, வட தமிழகம்- புதுச்சேரி கடற்கரைக்கான தூரம் 40 கி.மீ., ஆக இருந்தது.

இதன் காரணமாக, நேற்று காலை முதல் இரவு வரையில் சென்னை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்தது. குறிப்பாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் நேற்று காலை முதல் நேற்று இரவு வரையில் மழை பெய்து கொண்டே இருந்தது.

இந்நிலையில், சென்னை அருகே நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவில் வட தமிழகம்- புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிக்கு இணையாக வட திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. பின்னர் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு 30 கிமீ தொலைவில் நிலை கொண்டது.

இந்த நகர்வின் காரணமாக இன்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

நாளை இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதியின் ஊடாகப் பயணித்து மேலும் வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, படிப்படியாக தமிழகத்தில் மழை குறையும் என்றும், இலேசான மழை 7 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று முழுவதும் பெய்த மழை காரணமாக சென்னையில் 150 மிமீ மழை பதிவாகியுள்ளது. புழல் 150 மிமீ, வில்லிவாக்கம் 75 மிமீ, பள்ளிக்கரணை 66 மிமீ, தரமணி 50 மிமீ, காஞ்சிபுரம் 44 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் நேற்று மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது.

சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைபெய்யும் வாய்ப்பும் உள்ளது என்று வானிலை அறிக்கை சொல்லியிருக்கிறது.ஆனால்,சென்னை மற்றும் புறநகர் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.சில நேரம் மிதமாகவும் சில நேரம் கனமாகவும் பெய்துவருகிறது.இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Response