பார்ப்பனர்களுக்கு ஆபத்து பதறும் மோடி

பிகார் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிகார் மாநிலத்தில் 63.14 விழுக்காடு மக்கள் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஆதரித்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரசு ஆதரிக்கிறது. ஆனால், பாஜக இதனை எதிர்க்கிறது.

இந்நிலையில், சத்தீஸ்கரின் ஜக்டால்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த நாட்டின் வளங்களை அனுபவிக்கும் முதல் உரிமை சிறுபான்மையினருக்கே என்றார். ஆனால், காங்கிரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கிறது. காங்கிரசு இந்துக்களைப் பிரிக்க முயற்சிக்கிறது. மக்கள் தொகையின் பெரும் பகுதியாக ஏழைகள் உள்ளனர். ஆனால், இப்போது காங்கிரசுக் கட்சியோ, நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமையை மக்களே தீர்மானிப்பார்கள் என்று சொல்கிறது. அப்படியென்றால், இப்போது காங்கிரசு சிறுபான்மையினரின் உரிமைகளைக் குறைக்க நினைக்கிறதா?

காங்கிரசுக் கட்சி இந்துக்களை பிரிக்க முயற்சிக்கிறது. ஏழைகளைப் பிரிக்க நினைக்கிறது. தேசத்தையே சிதைக்க நினைக்கின்றனர். ஆனால், எனக்கு எல்லோரையும்விட ஏழைகளே பிரதானம். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காகத் தொடர்ந்து வேலை செய்வேன். காங்கிரசுக் கட்சி ஏழைகளின் உணர்வுகளோடு விளையாடுகிறது. 60 ஆண்டுகளாக அவர்கள் தேசத்தை சாதி ரீதியாகப் பிரித்தார்கள். இப்போது அதையே மீண்டும் செய்யவுள்ளனர். ஒரே பாவத்தை மீண்டும் செய்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக மோடி இவ்வளவு பதட்டமாகப் பேசக் காரணம் இருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால் மக்கள்தொகையில் மிகச்சிறிய அளவில் இருக்கும் பார்ப்பனர்கள் மிக அதிக அளவில் அதிகார வேலைவாய்ப்புகளைப் பெற்றிருப்பது அம்பலமாகிவிடும். அதை, தொடர்ந்து செய்யவியலாத சூழல் ஏற்படும் என்பதால் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்றாலே மோடி பதறுகிறார் என்று அரசியல்பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response