பொன்முடிக்கு துரைவைகோ ஆதரவு

தமிழ்நாடு மழை வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது….

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மழைக்கு முன்னதாகவே வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் உயிர்ச் சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு நிவாரண உதவி அளிக்காத நிலையில் வெள்ளச் சேத நிவாரணப் பணிகளுக்குப் போதிய ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. ஒன்றிய அரசு இதில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. தேசியப் பேரிடர் நிதியாக ரூ.450 கோடி மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இது வழக்கமான பேரிடர் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி. ஒன்றிய அரசு வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதனை ஒன்றிய நிதியமைச்சர் வழங்க முடியாது எனத் தெரிவித்திருப்பது அரசியல் விரோதப் போக்கையே காட்டுகிறது.

அமைச்சர் உதயநிதி தென்மாவட்டங்களில் தங்கி வெள்ள நிவாரணப் பணிகளைச் செய்து வருகிறார். சென்னையில் மிக் ஜாம் புயலால் சேதம் ஏற்பட்ட போதும் அமைச்சர் உதயநிதி நேரில் சென்று வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மக்களை உடனடியாக மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டார். ஒன்றிய அரசிடம் வெள்ள நிவாரண நிதி வழங்குமாறு கோரிக்கை வைத்தபோது, மக்கள் மீதுள்ள அக்கறையில் அவர்களது அப்பா வீட்டுப் பணத்தைக் கேட்கவில்லை என்று கூறியதில் தவறில்லை. மக்களின் வரிப்பணத்தை வழங்க வேண்டும் என்று தான் அவர் கோரிக்கை விடுத்தார். தற்போது அவர் மீண்டும் மரியாதைக்குரிய வகையில் பேசியுள்ளார். அமைச்சர் பொன்முடி சட்டப்படி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கிலிருந்து விடுதலை பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response