பிரதமர் மோடியை இப்படிச் சொல்லலாமா? – வட இந்தியாவில் புகழ்பெறும் சொல்

மிசோரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் மிசோரம் தேர்தல் நவம்பர் 7 ஆம் தேதியும் சத்தீஸ்கரில் நவம்பர் 7,17 ஆகிய தேதிகளிலும் மத்தியபிரதேசத்தில் நவம்பர் 17 ஆம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இராஜஸ்தானில் நவம்பர் 25, தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது.

இதற்கான பரப்புரைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நேரத்தில் வட இந்தியாவில் பனோதி என்ற சொல் பெரிதாகப் பேசப்பட்டுவருகிறது.கட்ந்த சில நாட்களாகவே சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிற சொல்லாக அது இருக்கிறது.

திடீரென இப்படி ஒரு சொல் பிரபலமாக என்ன காரணம்? என்றால், பிரதமர் மோடியைக் குறிக்கும் விதமாக அச்சொல் சொல்லப்பட்டுவருகிறது, அதனாலேயே வேகமாகப் பரவுகிறது என்கிறார்கள்.பனோதி என்றால் துரதிர்ஷ்டசாலி என்று நாகரிகமாகச் சொல்கிறார்கள்.

இன்னொருபக்கம், ‘பனோதி’ என்றால் அபசகுனம் என்று அர்த்தம். இன்னமும் பச்சையாகச் சொல்வதென்றால் தரித்திரம், பீடை என்றெல்லாம் சொல்லலாம் என்கிறார்கள்.

உலகக் கோப்பை மட்டைப்பந்துபோட்டியின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்குப் பின் மோடி கால் வைத்த இடமெல்லாம் தோல்வி வருகிறது என்று குறிக்கும் பனோதி என்ற சொல் பரவத் தொடங்கியது. பிஎம் என்றால் ‘பனோதி மோடி’ என்று இராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் பேசியபோது கூட்டம் மொத்தமும் சிரிப்பலைகளைகளாம்.

வட இந்தியா முழுமையும் அரசியல் புரிதல் இல்லாத அப்பாவி மக்களிடம் இந்தச் சொல் பெரிதாகச் சென்று சேர்ந்திருக்கிறது. இது அடுத்த ஆண்டு நடக்கிற நாடாளூமன்றத் தேர்தலில் பெரிதும் எதிரொலிக்கும் என்று பாஜகவினர் அஞ்சுவதாகச் சொல்லப்படுகிறது.

பாமர மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் பாஜக இப்போது ஒரு சொல்லைக் கண்டு அலறுவது கண்டு ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

Leave a Response