தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது…..
என்னுடைய தாத்தா முத்துவேலர், பாட்டு எழுதுவதில் மட்டுமல்ல, பாட்டுப் பாடுவதிலும் வல்லவர். அதேபோல், தலைவர் கலைஞரும் கவிதைகள் மட்டுமல்ல, நிறைய சினிமா பாடல்களையும்கூட எழுதியிருக்கிறார். அவர் பாட்டுப் பாடியது இல்லையே தவிர, அனைத்து இசை நுணுக்கங்களும் அவருக்கு நன்றாகத் தெரியும். ஒரு இசையைக் கேட்டவுடனே, அதில் எது சரி, எது தவறு என்பதைக் கூறிவிடுவார். அந்த அளவுக்கு வல்லமை பெற்றவர் அவர்.
அடுத்து, “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே” உள்ளிட்ட பாடல்களைப் பாடியவர் என்னுடைய மாமா தமிழிசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன். அந்தவகையில் எனக்கு இசையோடு நெருங்கிய உறவு இருக்கிறது. இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த பல்கலைக்கழகத்துக்குத்தான் உண்டு. முழுக்க முழுக்க மாநில அரசு நிதியுதவியில் செயல்படும் பல்கலைக்கழகம் இது. அதைவிடச் சிறப்பு என்னவென்றால், இந்தப் பல்கலைக்கழகத்துக்குத்தான், மாநிலத்தை ஆளும் முதலமைச்சரே வேந்தராக இருக்கும் உரிமை உள்ளது. நான் அரசியல் எல்லாம் பேசவில்லை. எதார்த்தத்தைப் பேசுகிறேன்.
இப்படி முதலமைச்சர்களே வேந்தர்களாக இருந்தால்தான், பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும், வளரும். மற்றவர்கள் கையில் இருந்தால், அதன் நோக்கமே சிதைந்து போய்விடும் என்று நினைத்துதான், 2013 ஆம் ஆண்டே, இந்த பல்கலைக்கழகத்தோட வேந்தர், முதலமைச்சர்தான் என்று அன்று ஆட்சியில் இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதற்காக அவரை மனதாரப் பாராட்டலாம். நானும் மனமுவந்து பாராட்டுகிறேன், இப்போது இருக்கக்கூடிய நிலையை நினைத்து.
இன்று இசைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், பத்மபூஷண் பி.சுசிலா,சுந்தரம் என இரண்டு இசை மேதைகளுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறோம். இதன் மூலம் டாக்டர் பட்டமும் பெருமை அடைகிறது. பாடகி சுசிலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். அவருடைய பாடல்களை வெளியூர் பயணங்களின்போது காரில் போட்டுக் கேட்பேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல், “நீ இல்லாத உலகத்திலே… நிம்மதி இல்லை”. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் புகழ்பெற்றவர் பாடகி சுசிலா. அதேபோல் இசையியல் அறிஞர் சுந்தரம் பன்முகத் திறமை கொண்டவர். மிகப்பெரிய இசைக் குடும்பத்தில் பிறந்து, இசைத்துறைக்கு அரிய தொண்டாற்றி வருபவர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருப்பதால்தான், மக்கள் எண்ணத்தைப் பிரதிபலிப்பது போன்ற இதுபோன்ற முடிவுகள் எடுக்க முடிகிறது. அதனால்தான், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதற்கான சட்ட முன்வடிவுகளையும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறோம். இதுதொடர்பான சர்ச்சைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. உச்ச நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது. நல்ல செய்தி வரும், என்று எதிர்பார்ப்போம். வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம்.
மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், நீதிபதிகள் அதில் கருத்துகளைக் கூறியுள்ளனர். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றினால்தான், அனைவருக்கும் கல்வி, உயர் கல்வி என்ற இலக்கை மாநிலங்கள் எட்ட முடியும். நான் தமிழ்நாட்டுக்காக மட்டும் இதைக் கூறவில்லை, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துத்தான் இவ்வாறு கூறுகிறேன். கல்விதான் ஒருவருடைய நியாயமான சொத்து. அந்தக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்பதுதான், நமது திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கை.
நலிந்த நிலையில் இருக்கும் மரபுவழிக் கலைகள், பண்டைய தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கலைகள், அந்தக் கலைகளைப் புதுப்பித்து, வருங்கால தலைமுறைகளிடம் கொண்டு செல்லும் வகையில் இந்தப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அதற்கான முழு ஒத்துழைப்பையும் மாநில அரசு அளித்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பலரும், இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் இசை மற்றும் கவின்கலைகளைக் கற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமூகநீதியை காக்கும் பல்கலைக்கழகமாக இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது
இவ்வாறு அவர் பேசினார்.