இதுதான் சரியான இந்தியா – கிரிக்கெட்டை வைத்து காங்கிரசு பதிவு

உலகக்கோப்பை மட்டைப்பந்து ஒருநாள் போட்டித்தொடர் தற்போது நடந்துவருகிறது.நவம்பர் 19,2023 ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரில் அமைந்துள்ள மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நடப்பு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டியை அடைந்துள்ளது. இதனால்,இரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்.

இதனிடையே, இந்திய அணியின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் காங்கிரசுக் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வரைபடம் கவனம் ஈர்த்துள்ளது. அந்த வரைபடத்தில், நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் விளையாடும் இந்திய மட்டைப்பந்து அணி வீரர்கள் எந்தெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் இடம்பெற்று உள்ளன.

அதன் கூடவே அப்பதிவில்,”பல்வேறு பகுதிகள், பல்வேறு மொழிகள், வேறுபட்ட மதங்கள், ஆனாலும், ஒரு அசைக்க முடியாத ‘டீம் இந்தியா.’ இது நமது தேசத்தின் உண்மையான சாராம்சத்தை உணர்த்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளது.

தற்போது இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக, இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மைக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறது.

இதற்கு தமிழ்நாடு அளவில் திமுகவும் ஒன்றிய அளவில் காங்கிரசுக்கட்சியும் கடும் எதிர்வினை ஆற்றிவருகிறது. தற்போது கிரிக்கெட் சீசனை முன்னிட்டு பன்முகத்தன்மை குறித்துப் பாடமெடுத்துள்ளது காங்கிரசுக்கட்சி.

இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது.

Leave a Response