ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய ஆயுதப்படைக் காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், “அரசியலமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரித்துள்ளது. ஆனால், ஆள்சேர்க்கைக்கான கணினித் தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக இளைஞர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 9,212 காலிப் பணியிடங்களில், 579 பணியிடங்கள் தமிழகத்தில் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் 12 மையங்களில் இத்தேர்வு நடக்க உள்ளது. ஆனால், தமிழகத்தில் இருந்து இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர், சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அறிவிக்கையின் மற்றொரு மறைமுக அம்சமாக, மொத்தம் 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழி அடிப்படை புரிதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தேர்வு இந்தி பேசுவோருக்கே சாதகமாக உள்ளது. இது தமிழகத்தில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு எதிரானது. இது தன்னிச்சையானது மட்டுமின்றி, பாகுபாடு காட்டக் கூடியதும் ஆகும். அவர்கள் பணியாற்றும் வாய்ப்பையும் இத்தேர்வு பறிக்கிறது.
ஆங்கிலம், இந்தியில் மட்டுமே கணினித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு, தேர்வு எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் சமவாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது. எனவே, தாங்கள் இதில் உடனே தலையிட்டு, இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சமவாய்ப்பு பெறும் வகையில், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இத்தேர்வை நடத்த ஏதுவாக அறிவிக்கையில் மாற்றம் செய்ய அதிகாரிகளை அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இதன் பலனாக, ஒன்றிய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) காவலர்களுக்கான தேர்வு இந்தி, ஆங்கிலம் தவிர இனி 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 15 அன்று தெரிவித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை அடுத்த ஆண்டு சனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“மத்திய ஆயுதப் படையில் உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கும், மாநில மொழிகளை ஊக்குவிப்பதற்காகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த முடிவை எடுத்துள்ளார். இனி மத்திய ஆயுதப் படை காவலர் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் இந்தி, ஆங்கிலம் தவிர அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளிலும் அமைக்கப்படும். இந்த முடிவின் மூலமாக இலட்சக்கணக்கான தேர்வர்கள் தங்களின் தாய்மொழியில் தேர்வெழுதுவதுடன் தங்களுக்கான தேர்வு வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
மாநில மொழிகளில் தேர்வுகளை நடத்துவதற்கு வசதியாக மத்திய உள்துறை அமைச்சகமும் பணியாளர்கள் தேர்வு வாரியமும் இணைந்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளது. இந்தப் புதிய வாய்ப்பினை பயன்படுத்தி உள்ளூர் இளைஞர்கள் மத்திய பணிகளில் சேர்வதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“கடந்த வாரம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் எழுதியிருந்த கடிதத்தின் விளைவாக, மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) காவலர் தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.
ஒன்றிய அரசின் இந்த முடிவை மனதார வரவேற்கும் அதேவேளையில், ஒன்றிய அரசால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளிலும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும் என்கிற நமது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக இந்திய ஒன்றியம் முழுவதிலுமுள்ள அனைத்து மொழி இளைஞர்களுக்கும் நல் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என அவரைப் பாராட்டி வருகிறார்கள்.