தமிழ்ப்புத்தாண்டு எது? – 2008 இல் விடுதலைப்புலிகள் அறிவிப்பு

உலகில் எந்த இனத்துக்கும் இல்லாத கொடுநிலை தமிழினத்துக்கு வாய்த்துள்ளது. தமிழே இல்லாத பிறமொழிச் சொற்களைக் கொண்ட பெயர்களைக் கொண்ட ஆண்டுகளை வைத்து தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வதுதான் அந்தக் கொடுநிலை.

ஆனால், எல்லாவற்றையும் போல் இதிலும் விழிப்புற்ற தமிழினம், திருவள்ளுவர் பிறந்தநாளைக் கணக்கிட்டு தமிழப்புத்தாண்டு கொண்டாடிவருகிறது.

தாய்த்தமிழ்நாட்டு அறிஞர்கள் மட்டுமின்றி உலகத்தமிழரகளின் அடையாளமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்துள்ளது.

21.12.2008 தேதியிட்டு அவ்வமைப்பு இது தொடர்பாக பொறுப்பாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்….

அனைத்துப் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு,

அன்புடையீர், எதிர்வரும் சனவரி 14 ஆம் நாள் தைப்பொங்கல் திருநாள் ஆகும்.இதுவே தமிழரின் புத்தாண்டாகும்.தமிழரின் பண்பாட்டு வாழ்வை எடுத்துக்காட்டும் தைப்பொங்கல் தினத்தை உலகம் முழுவதும் சிறப்பாக்க் கொண்டாட வேண்டுமென விரும்புகிறோம்.இவ்விழா மூலம் தமிழரின் பண்பாட்டு மரபைக் கடைபிடிப்பதோடு, எமது இளையோர்களிற்கும் வெளிநாட்டவர்களிற்கும் தமிழரின் தொன்மை வாய்ந்த பண்பாட்டு வாழ்வியலின் சிறப்பை வெளிப்படுத்துவதாகவும் இப்பொங்கல் தினத்தை, தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடுமாறு வேண்டுகிறோம்.

தமிழர் தாயகத்தில் மக்கள் இராணுவப் படையெடுப்புகளாலும் இடப்பெயர்வுகளாலும் வெள்ளத்தாலும் மிகுந்த நெருக்கடிக்குள் வாழ்ந்தாலும் தமிழர் திருநாளைக் கொண்டாடத் தவற மாட்டார்கள். ஏனெனில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற தமிழ் முதுமொழிக்கேற்ப தன்னம்பிக்கையுடன் வரும் காலத்தை எதிர்கொள்ளும் தினமாக இந்நாள் கடைபிடிக்கப்படும்.

எனவே, நீங்கள் வதியும் நாடுகளில் தமிழர் வாழும் அனைத்து வீடுகளிலும் கோவில்களிலும் பாடசாலைகளிலும் நகரங்களிலும் பொது இடங்களிலும் தைப்பொங்கல் தினத்தை, தமிழரின் புத்தாண்டைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள். ஆடம்பரம் இல்லாமல் தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இளையோர்களையும் வெளிநாட்டவர்களையும் இணைத்து தமிழர் தம் வாழ்வின் இன்னல்கள் நீங்கி, விடுதலை கிட்டும் என்ற நம்பிக்கைத் திருநாளாகத் திருநாளாகத் தைப்பொங்கல் கொண்டாடப்படல் சிறப்பானதாகும்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வாறு அந்தக் கடித்த்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response