தென்மாவட்டங்களில் எடப்பாடிக்குக் கறுப்புக்கொடி

அதிமுகவில் பதவிச்சண்டை உச்சகட்டத்தில் இருக்கிறது. ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் கடும்போட்டியில் இருக்கின்றனர். மேற்கு மற்றும் வடமாவட்டங்களில் இபிஎஸ்ஸுக்கு செல்வாக்கு இருக்கிறதென்றும், தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ்ஸுக்கு செல்வாக்கு அதிகம் என்று கூறப்படும் நிலையில், அங்கும் தொண்டர்கள் தன் பக்கம்தான் என்று பலத்தைக் காட்டுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை நேற்று துவக்கினார்.

மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய ஊர்களில் நேற்று நடந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்க அவர் நேற்று காலை விமானத்தில் மதுரை வந்தார்.

விமானநிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு தாமரை மாலை அணிவித்து, கையில் வேல் கொடுத்து வரவேற்றனர். இது, அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுதவிர, மதுரை விமான நிலையத்தில் பயணிகள் வாகனம் நிறுத்தும் இடத்தில் அதிமுகவினர் திடீரென முன் அனுமதியின்றி சர்ச்சைக்குரிய வகையில் மேடை அமைத்து, வரவேற்பு அளித்தனர்.

தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கடந்த ஆட்சியின் போது, இட ஒதுக்கீடு விசயத்தில் அவரது நடவடிக்கையைக் கண்டித்து ஒரு சமூகத்தினர் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர்.

இதற்கிடையில், சிவகாசி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை வந்தார்.

அவர் வருகைக்கு ஓபிஎஸ் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஓபிஎஸ் ஆதரவாளரான மாவட்டச் செயலாளர் பாலகங்காதரன் தலைமையில் விருதுநகர் – சிவகாசி ரோட்டில் கறுப்புக் கொடிகளுடன் ஏராளமானோர் திரண்டனர். ‘உண்மையான பொதுச் செயலாளர் ஓபிஎஸ்தான். எடப்பாடிக்கு இங்கே வேலை இல்லை. வருகையைக் கண்டிக்கிறோம்’ என்று முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோரை ஆமந்தூர் காவல்துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Leave a Response