எழுச்சியுடன் தொடங்கியது இராகுல்காந்தி நடைபயணம் – மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

அகில இந்திய காங்கிரசுக் கட்சித் தலைவர் இராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே இருந்து இன்று (7 ஆம் தேதி) மாலை தொடங்கினார்.

மோடி ஆட்சியை வீழ்த்தவும், மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக காஷ்மீர் வரை மொத்தம் 3500 கி.மீ தூரத்தை 150 நாட்களில் கடக்கிறார்.

இதற்காக நேற்று மாலை தில்லியில் இருந்து விமானம் மூலம் இராகுல்காந்தி சென்னை வந்து சேர்ந்தார். இன்று காலை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சென்றார். அங்கு அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான இராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பகல் 11.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டார். திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்குக் கன்னியாகுமரி சென்று சேர்ந்தார்.

பின்னர் காமராஜர் மணிமண்டபத்திலும், காந்தி மண்டபத்திலும் மரியாதை செலுத்தினார்.

அதன்பின், காந்தி மண்டபத்தில் இருந்து தேசியக்கொடியை இராகுல் காந்தியிடம் வழங்கி இந்திய ஒற்றுமைப் பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்திய ஒற்றுமைப் பயணத்தில், காங்கிரசு மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், இராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோரும் உடனிருந்தனர்.

அங்கிருந்து 600 மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு இராகுல்காந்தி சென்றார். இராகுல்காந்தியுடன் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ள 118 பேர் உட்பட 300 பேர் பயணிக்கின்றனர். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இராகுல்காந்தி பேசினார்.

பொதுக்கூட்டத்தில் இராகுல்காந்தி பேசியதாவது……

3 சமுத்திரமும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்துடன் என் உறவு ஆழமானது. தமிழகத்திற்கு ஒவ்வொரு முறையும் வரும்போது மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் செல்கிறேன்.

தேசத்தை ஒற்றுமைப்படுத்தக்கூடிய அவசியம் எழுந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர். ஆர்.எஸ்.எஸ், பாஜக, தேசியக் கொடியை தங்கள் தனிப்பட்ட கொடியாகக் கருதுகிறார்கள். தேசியக்கொடி என்பது தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தமானது அல்ல. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்டு வெல்லப்பட்டது தான் தேசியக்கொடி. ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு மொழி, ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது தேசியக்கொடி. தற்போது மிகப்பெரிய தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் தேசியக்கொடி உட்படுத்தப்படுள்ளது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் உரிமையை உறுதிபடுத்துகிறது இந்தக் கொடி.

இந்திய மக்கள் ஒருநாளும் அச்சப்பட மாட்டார்கள் இந்திய மக்களை பாஜக புரிந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை வைத்துக் கட்டுப்படுத்த நினைக்கின்றனர். ஒவ்வொரு ஜனநாயக அமைப்பும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இங்கே வருகை தந்து எனது நடைபயணத்தை வாழ்த்தி, தொடங்கி வைத்த அன்புச் சகோதரர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்கூட்டம் முடிந்து இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ஓய்வு எடுக்கிறார்.

இராகுல்காந்தியுடன் நடைபயணத்தில் பங்கேற்க இந்தியா முழுவதும் இருந்து 118 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 28 பேர் மகளிர் ஆவர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காயத்ரிராஜ் முரளி, முகம்மது ஆரிப், வழக்குரைஞர் சுதா ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இராகுல்காந்தியுடன் மொத்தம் 119 பேர் காஷ்மீர் வரை செல்கின்றனர்.

இராகுல் நடைபயணம் தொடர்பான விவரங்களை www.bharatjodoyatra.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்றும், அனைத்துத் தன்னார்வலர்களும் தினமும் மாலை 3 மணி முதல் பயணத்தில் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response