பாஜகவில் கர்நாடகா முதலமைச்சர் பதவியின் விலை 2500 கோடி

கர்நாடக காங்கிரசு மேலவை உறுப்பினர் ஹரிபிரசாத் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது…..

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் நிறையப் பேர் முதல்வராக ஆசைப்படுகிறார்கள். அரசியலில் இருந்து விலகி இருந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு பாஜக ஆட்சி மன்றக் குழுவில் இடமளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் ஆகிய இரண்டிலும் எடியூரப்பா முக்கியப் பங்கு வகிப்பார் என்பது உறுதியாகிவிட்டது.

எனவே அவரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட வாய்ப்பு இருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை பணம் கொடுத்தால் மட்டுமே பதவி கொடுப்பார்கள். முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பாஜக தலைவர்கள் சிலரே பகிரங்கமாகக் கூறியுள்ளனர். அதனால் பசவராஜ் பொம்மையின் பதவி நிரந்தரம் இல்லை.

இவ்வாறு ஹரிபிரசாத் தெரிவித்தார்.

கடந்த மே மாதத்தில் பாஜக மூத்த சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் யத்னால், ”ரூ. 2500 கோடி கொடுத்தால் முதல்வர் பதவி தருவதாக டெல்லி மேலிடத் தலைவர்கள் என்னிடம் பேரம் பேசினார்கள்” எனக் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response