அணிக்குள் சலசலப்பு – எடப்பாடி மனச்சோர்வு

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 17 அன்று தீர்ப்பு வழங்கியது. அதில், அதிமுக பொதுக்குழு செல்லாது. எடப்பாடி பழனிச்சாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்ததும் செல்லாது‘ என்று உத்தரவிட்டது.

இதனால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இருக்கும் என்பதால் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி தீர்ப்புக்குப் பிறகு இழந்தார்.

ஜூன் 11 ஆம் தேதிக்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தாளில், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்’ என்று பதிவிட்டிருந்தார்.

தீர்ப்புக்குப் பிறகு கடிதத்தாளில் தனது பதவியை மாற்றம் செய்துள்ளார் எடப்பாடி. நேற்று கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், ‘எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர்’ என்று மாற்றம் செய்து இருந்தார்.

இதற்கிடையே நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி அணியினருக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக, தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது நிர்வாகிகளில் பலர் ஓபிஎஸ்சுடன் இணங்கிப் போகலாம். அவரோடு முன்புபோலவே இணைந்து செயல்படுவோம். அடுத்த ஆண்டு பொதுக்குழு கூடும் போது நம்முடைய பலத்தை நிரூபித்து வெற்றி பெறுவோம்.
அதன் பிறகு ஓபிஎஸ்சை வெளியேற்றி விடலாம் என்று கூறியுள்ளனர்.

இன்னொரு தரப்பினர், ஓபிஎஸ் உடன் எந்தத் தொடர்பும் வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் எடப்பாடி அணி இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறதாம். இதனால் அவர் கடும் மனச்சோர்வு அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response