2018 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மரணம் – விசாரணை ஆணையத்தின் அதிர வைக்கும் அறிக்கை

தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் 100 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 ஆவது நாள் போராட்டத்தில் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்றனர். அப்போது கலவரம் ஏற்பட்டு காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பள்ளி மாணவி உட்பட 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அப்போதைய அரசு அறிவித்தது.

அனைவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், 5 தொகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கையை மே 18 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதில் கூறியிருப்பதாவது…..

மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூடு ஒரு மோசமான செயல். ஸ்னோலின் ஜாக்சன் என்ற 18 வயது பள்ளி மாணவி உட்பட 13 சுட்டுக் கொல்லப்பட்டனர். பேரணியின்போது, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் ஒருங்கிணைப்பு இல்லாததே கலவரம் முற்ற காரணம். குற்றவாளிகள் மீது கிரிமினல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நிராயுதபாணியான பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையைக் கண்டிக்கிறோம்.

போராட்டக்காரர்களின் கூட்டத்தைக் கையாள்வதற்காகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யாருடைய உத்தரவும், தூண்டுதலின்றி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. காவல்துறை அறிக்கையின்படி, தப்பி ஓடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்று கூறுகிறது. ஆனால்,காவல்துறையினர் வெகு தொலைவில் இருந்த போராட்டக்காரர்கள் மீது மறைவிடங்களில் இருந்து சுடுவதில் ஈடுபடும் ஒரு வழக்கும் இங்கே உள்ளது.

தோட்டாக்கள் எங்கிருந்து, எந்தத் திசையில் இருந்து வருகின்றன என்பதைப் போராட்டக்காரர்கள் அறியவில்லை. இதன் விளைவுதான் குழப்பம், அழிவு மற்றும் மரணம்.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாரம்பரிய பூங்காவில் மறைந்திருந்து காவல் துறையினர் நடத்திய முதல் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் உத்தரவின் பேரில், விதிகளை பின்பற்றாததைக் காரணம் காட்டி மே 28 ஆம் தேதி ஆலையை அப்போதைய அதிமுக அரசு மூடியது.

அப்போதைய தென் மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ் (இப்போது ஏடிஜிபி, போலீஸ் நலன்). டிஐஜி (திருநெல்வேலி ரேஞ்ச்) கபில் குமார் சி சிர்கார் (இப்போது கூடுதல் காவல் ஆணையர், சென்னை), காவல் கண்காணிப்பாளர் (தூத்துக்குடி) பி.மகேந்திரன் (தற்போது துணை ஆணையர் (நிர்வாகம்), சென்னை), உதவி எஸ்பி (தூத்துக்குடி) லிங்கத்திருமாறன் மற்றும் மூன்று இன்ஸ்பெக்டர்கள், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு தலைமைக் காவலர் மற்றும் ஏழு காவலர்கள்தான் கலவரத்துக்குப் பொறுப்பு. இவர்கள் வரம்பை மீறிவிட்டார்கள். அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை புறக்கணிக்கப்பட்டதற்காக காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதைய மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷை (இப்போது தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், ஐதராபாத்) அவரது பொறுப்பில் இருந்து விலகி, கடுமையான அலட்சியத்துடன் தவறான முடிவுகளை எடுத்துள்ளார். மே 22 ஆம் தேதி போராட்டம் நடக்கும்போது தூத்துக்குடியில் உள்ள தலைமை அலுலகத்தில் தங்குவதற்குப் பதிலாக, 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டியில் தங்கி இருந்துள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிட்டுகுருவிகள் சுடுவது போல், மக்கள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் மண்டையின் பின்பக்க வழியாக தோட்டாக்கள் நுழைந்து முகத்தின் முன்பகுதி வழியாக வெளியேறி உள்ளது. இறந்த 13 பேரில் ஸ்னோலின் ஜாக்சன் உட்பட ஆறு பேர் பின்னால் இருந்து சுடப்பட்டவர்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அப்போதைய அரசாங்கத்தின் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் ஆணையத்துக்குக் கிடைக்கவில்லை.

மே 22 பேரணியில் பங்கேற்றவர்கள் நிராயுதபாணிகளாக கற்களை வீசுவதில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறையினரின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை. போராட்டக்காரர்களை ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் செல்வதைத் தடுக்க காவல்துறைக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்களின் திறமையற்ற கையாளுதலால் இந்தக் கலவரம் நடந்துள்ளது. காவல்துறையினர் இடுப்பு மற்றும் முழங்கால்களுக்குக் கீழே குறிவைக்கவில்லை. அவர்கள் நகரின் பல்வேறு இடங்களில் கூடியிருந்த மக்களை நோக்கி சீரற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

போலீஸ் ஐஜி சைலேஷ் குமார் யாதவ், துப்பாக்கிச் சூடு பற்றி முற்றிலும் அறிந்திருக்கவில்லை.
ஆட்சியர் அலுவலகம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து சைலேஷ் குமார் யாதவுக்கு டிஐஜி கபில் குமார் சி.சரட்கார் மற்றும் டிஎஸ்பி லிங்கத்திருமாறன் ஆகியோர் தகவல் அளிக்கவில்லை. ஐஜி (மதுரை ரேஞ்ச்) மற்றும் டிஐஜி (திருநெல்வேலி) ஆகிய இருவருமே தமிழர் அல்லாதவர்கள். அப்பகுதியின் மொழி மற்றும் நிலப்பரப்புக்குப் புதியவர்கள்.

ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். அப்போது, ​​தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்பி அருண் சக்தி குமார் ஆகியோருடன் சுடலைக்கண்ணு இந்திய உணவுக் கழகம் குடோனில் இரண்டு பேரைச் சுட்டுக் கொன்று உள்ளார்.

பின்னர் திரேஷ்புரத்தில் ஒரு பெண்ணையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த இரண்டு அதிகாரிகளும் தங்கள் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஐஜி மற்றும் பிற மூத்த அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை. மே 22 அன்று அமைதியை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் யுத்திகளை உருவாக்காமல் இருந்ததற்கு ஐஜிதான் காரணம்.

ஆட்சியர் வெங்கடேஷ் ஆரம்பத்திலிருந்தே அலட்சியமாக இருந்தார். மே 22 க்கு முந்தைய அமைதிக் குழுக் கூட்டத்திற்கு அவர் தலைமையேற்கவில்லை. உதவி ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் கூட்டத்தைக் கையாண்டார்.
அந்த நேரத்தில், அவர் தனது முகாம் அலுவலகத்தில் மிகவும் வசதியாக இருந்தார். தூத்துக்குடி நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போட வேண்டும் என்று எஸ்பி மகேந்திரன் வலியுறுத்திய போதிலும், தூத்துக்குடி சிப்காட் மற்றும் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில பகுதிகளில் மட்டும் ஆட்சியர் 144 உத்தரவை அறிவித்தார்.

இந்த உத்தரவு அனுமதிக்கப்பட்ட போராட்ட இடமான எஸ்ஏவி உயர்நிலைப் பள்ளி மைதானத்திற்குச் செல்லும் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவர்கள் அந்த இடத்தை அடைய விடாமல் தடுத்தது.

தூத்துக்குடியைச் சேர்ந்த சேகர், (துணை தாசில்தார், தேர்தல்), கண்ணன் (கோட்ட கலால் அலுவலர்), சந்திரன் (மண்டல துணை தாசில்தார்) ஆகிய மூன்று தாசில்தார்கள் ஆகியோரின் முழு செயலற்ற தன்மையே கலவரத்துக்குக் காரணம். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு 21 ஆவது பிரிவின் கீழ் உத்தரவுகளைப் பெற வேண்டும். எனவே, தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை கமிஷன்கள் சட்டம், 1952 இன் பிரிவு 3(4)ன் கீழ், நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த இறுதி அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதனால், அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக அரசு சார்பில் இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Response