பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் திமுக பாராளுமன்ற உறுப்பினரின் செயல்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைக்கும் பணியை தருமபுரி திமுக பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேற்று தொடங்கிவைக்க வந்திருந்தார். பொதுப் பணித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பூமி பூசையில் அர்ச்சகரை வைத்து இந்துமுறைப்படி பூசை செய்யத் திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பான காணொலியை தனது ட்விட்டர் பகிர்ந்த அவர், “ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையைச் சோதிக்கிறார்கள்” என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த காணொலியில், “அரசு நிகழ்ச்சிகளில் மத ரீதியான பூசைகள் நடத்தக்கூடாது என்று அறிவிப்பு கொடுத்த பின்னரும், பூசை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஏன்?” என அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “இது இந்து மதத்திற்கான பூசை செய்யும் இடமில்லை. கிறிஸ்டியன் ஃபாதர் எங்கே? இஸ்லாம் மதத்தின் இமாம் எங்கே? திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எங்கே? முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இது போன்று நடைபெறுவதில்லை. இது திராவிட மாடல் ஆட்சி. இதுபோன்ற நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்றால், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நடத்துங்கள். ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக்கூடாது” என்று கூறி அதிகாரிகளிடம் கடுமை காட்டிய செந்தில்குமார், அங்கிருந்த பூசை பொருட்களை உடனடியாக அகற்றிய பின்னரே தொடங்கிவைத்தார்.

செந்தில்குமாரின் இந்தச் செயலுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதேநேரம், பொதுமக்களும் முற்போக்காளர்களும் அவருக்கு பெரும் ஆதரவு தெரிவித்து அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

Leave a Response